மதுக்கரை:கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்தவர் அப்துல்சலாம், 50; ரியல் எஸ்டேட், கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த, 24ம் தேதி சம்சுதீன், 42 எனும் டிரைவரை அழைத்துக்கொண்டு பெங்களூரு சென்றார். நேற்று முன்தினம் அதிகாலை மலப்புரத்துக்கு, கோவை - பாலக்காடு சாலையில் சென்றனர்.நவக்கரை எல்லை காளியம்மன் கோவில் அருகே செல்லும்போது, இரு வாகனங்களில் வந்த ஐந்து பேர் கும்பல், இவர்களது காரை வழிமறித்தது. கத்தியை காட்டி மிரட்டி, காரை கடத்தியது. க.க.சாவடி போலீசில் புகார் செய்தனர்.
ரூரல் எஸ்.பி.அருளரசு உத்தரவில், டி.எஸ்.பி., சீனிவாசலு மேற்பார்வையில் மூன்று தனிப்படையினர், கடத்தல் கும்பலை தேடினர். நேற்று மாதம்பட்டியில் கார் நிற்பது தெரிந்தது. போலீசார் காரை மீட்டு, ஸ்டேஷனுக்கு எடுத்து வந்தனர். காரை சோதனை செய்ததில், ரகசிய அறையில், பெட்டியில் கட்டு, கட்டாக ரூபாய் நோட்டுகள் காணப்பட்டன.
போலீசார் அவற்றை கணக்கிட்டபோது, 90 லட்சம் ரூபாய் இருந்தது. இது, ஹவாலா தொகை என்பதும் தெரிந்தது. இதையடுத்து, தொகையை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலையும் தேடுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE