சென்னை:'அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணியில் சேர்க்காமல், தே.மு.தி.க., ஓரம் கட்டப்படுகிறதா' என்ற சந்தேகம், அக்கட்சி நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்தலிலும், கூட்டணி பேச்சு என்ற பெயரில் காலம் தாழ்த்துவது, தே.மு.தி.க., தலைமையின் வழக்கம். அக்கட்சி பேரம் நடத்துவதாக பலரும் குற்றஞ்சாட்டுவர். இதுவே, தே.மு.தி.க.,விற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.கடந்த, 2011 சட்டசபை தேர்தலுக்கு பின் நடந்த அனைத்து தேர்தல்களிலும், தோல்வியை சந்தித்து வருகிறது. அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் தோற்றால், கட்சியின் அங்கீகாரம் ரத்தாகி விடும். இது, தே.மு.தி.க.,விற்கு பெரும் நெருக்கடியான நிலைமையாகும்.
இதனால், பலமான கூட்டணியில் இணைய வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது. அ.தி.மு.க., - தி.மு.க., என, இரண்டு தரப்பிலும் பேச்சு நடத்தி வருவதாக, தே.மு.தி.க., நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.எந்த கூட்டணியில் அதிக, 'சீட்' கிடைக்கிறதோ, அதில் தே.மு.தி.க., இடம் பெறும் என, மாவட்டச் செயலர்களிடம், கட்சியின் பொருளாளர் பிரேமலதா உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், பா.ம.க.,விற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, தே.மு.தி.க.,விற்கு, அ.தி.மு.க., தலைமை அளிக்கவில்லை. தே.மு.தி.க.,விடம் இருந்து, ஆள் இழுப்பு நடவடிக்கைகளை தி.மு.க., துவங்கி விட்டது.இதனால், அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகளில், தே.மு.தி.க., ஓரம் கட்டப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது, அக்கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விரக்தி அடைந்துள்ள கட்சியினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், 'தேர்தல் கூட்டணி அமைய, இன்னும் நிறைய நேரம் இருக்கிறது' எனக்கூறி, பிரேமலதா சமாளித்து வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE