ஈரோடு:கடந்த ஆக., மாதத்தை ஒப்பிடுகையில் விலை உயர்ந்து, பட்டுக்கூடு கிலோ, 500 ரூபாயாக விற்பனையாவதால், விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதுபற்றி, தமிழ்நாடு பட்டு விவசாயிகள் சங்க தலைவர் வி.கே.சண்முகசுந்தரமூர்த்தி கூறிய தாவது:கடந்த மார்ச் மாத துவக்கத்தில் ஒரு கிலோ பட்டுக்கூடு, சேலம், தர்மபுரி, கர்நாடகா மாநிலம் ராம் நகரில், 550 ரூபாய் என்ற விலையில் வாங்கினர். கொரோனாவால் மார்ச் இறுதி முதல், ஜூலை வரை, வாங்கவில்லை.
ஜூலை இறுதியில், பட்டுக்கூட்டை வாங்கும்போது, 150 முதல், 200 ரூபாய்க்கு வாங்கினர்.ஒரு கிலோ பட்டுக்கூடு உற்பத்தி செய்ய, 350 ரூபாய் செலவாகும். இதனால், பெரும் நஷ்டத்தை சந்தித்தோம். ஆனால், ஆக.,ல், 250 ரூபாயாக உயர்ந்து, நேற்று முன்தினம், தர்மபுரியில் கிலோ, 486 முதல், 500 ரூபாயும், ராம் நகரில், 530 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.இதற்கு முக்கிய காரணம், தற்போது கோவில் விழா, திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.
கடைகள் முழு அளவில் திறக்கப்பட்டதால், பட்டு விற்பனை நடக்கிறது. தவிர, சீனாவில் இருந்து சீனப்பட்டு இறக்குமதி, 80 சதவீதம் தடைபட்டுள்ளது. இதனால், நமது உற்பத்திக்கு வரவேற்பு ஏற்பட்டு, விலை உயர்கிறது.ஆண்டு முழுவதும் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப் படுகிறது. தற்போதைய மழையால், மல்பெரி செடி நன்கு வளர்வதுடன், நோய், பூச்சி தாக்குதல் போன்றவை இல்லாததால், வரும் நாட்களில் பட்டுக்கூடு உற்பத்தி அதிகரிக்கும். விலையும் உயரும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE