கிருஷ்ணகிரி,:''தி.மு.க., கூட்டம் என கூறினால், மக்கள் வர மாட்டார்கள் என்பதால், மக்களை ஏமாற்ற கிராம சபை என்ற பெயரை பயன்படுத்துகின்றனர்,'' என, அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி கூறினார்.
கிருஷ்ணகிரி நகர, அ.தி.மு.க., சார்பில் நடந்த, ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது:அ.தி.மு.க., ஆட்சியின் மீது எந்த குறையும் கூற முடியவில்லை. கிராம சபை என்றால், அனைத்து தரப்பு மக்களும் கூடுவர். அதை பயன்படுத்தி, தங்களது கருத்துகளை சொல்ல, தி.மு.க.,வினர் முயற்சிக்கின்றனர்.
தி.மு.க., என கட்சி பெயரை சொன்னால், மக்கள் வர மாட்டார்கள் என்பதால், மக்களை ஏமாற்ற, கிராம சபை என்ற பெயரை பயன்படுத்துகின்றனர். மக்கள் நிச்சயம் ஏமாற மாட்டார்கள். பா.ம.க.,வுக்கு சில கொள்கைகள் உள்ளன. அதை முன்நிறுத்தி போராட்டம் நடத்துகின்றனர். தமிழக முதல்வர் பழனிசாமி, அனைத்து சமூக மக்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். பா.ம.க., கோரிக்கையை ஏற்று, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து சமூக மக்களின் உணர்வை மதித்து, அவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில், அரசு நடவடிக்கையை முன்னெடுத்து செல்லும். இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை ஆழமாக சிந்தித்து, நிரந்தர முடிவு எடுத்தால் தான், இந்த சமூக பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE