ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்காவில்,கோடை சீசனுக்காக, ஐந்து லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் அடுத்த ஆண்டு, ஏப்., மே மாதம் நடக்க உள்ள கோடை விழா நிகழ்ச்சிகளுக்கு, 230 வகையான விதைகள், ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வாங்கப்பட்டுள்ளன.பூங்காவில் சேகரிக்கப்பட்ட விதைகளில் இருந்தும் மலர் நாற்று உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சீசன் காலங்களில், பொதுவாக, 15 ஆயிரம் மலர் தொட்டிகளில், நாற்று நடவு செய்யப்படுகிறது.
இம்முறை, கூடுதலாக ஐந்தாயிரம் தொட்டி சேர்க்கப்படுகிறது. மொத்தம், 20 ஆயிரம் மலர் தொட்டிகளில் இயற்கை உரம் கலந்த மண் நிரப்பப்பட்டு வருகிறது. சில நாட்களில், நாற்று நடவுப் பணி துவங்க உள்ளது.பூங்கா அதிகாரிகள் கூறுகையில், 'அடுத்தாண்டு கோடை சீசனுக்காக, பூங்காவில் பாத்திகள் அமைப்பது, தொட்டிகளில் இயற்கை உரம் கலந்த மண் நிரப்பும் பணி நடந்து வருகிறது.
விரைவில், ஐந்து லட்சம் மலர் நாற்றுகள் தொட்டியில் நடவு செய்யப்படும். மண் நிரப்பும் பணி, 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது' என்றனர்.நுழைவு கட்டணம் உயர்வு: தோட்டக்கலை துறைக்கு சொந்தமான, ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னுார் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூங்கா ஆகியவற்றில், நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பெரியவர்களுக்கு, 50 ரூபாய்; சிறியவர்களுக்கு, 30 ரூபாய்; வீடியோ கேமராவுக்கு, 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, முன்பிருந்த கட்டணத்தை காட்டிலும், 10 ரூபாய் அதிகம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE