திருப்பூர்:'மத்திய, மாநில அரசு திட்டங்களை, வேளாண்துறை அதிகாரிகள் வெளிப்படையாக செயல்படுத்த வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.மாவட்டம் முழுவதும், பிரதமரின் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பிரதமரின் உரை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இத்தகவல், பெரும்பாலான விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கு தெரியவில்லை. இது, விவசாய சங்க பிரதிநிதிகள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், ''கொரோனா ஊரடங்கிற்கு பின், வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு போதியளவில் இல்லை. மத்திய, மாநில அரசு திட்டங்கள் குறித்த தகவலும் இல்லை. திருப்பூர் வட்டாரத்தில், உதவி இயக்குனர் இல்லாததால், விவசாயிகளுடன் தொடர்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் நிகழ்ச்சி குறித்த எவ்வித தகவலும் தெரிவிக்காமல், எங்களை புறக்கணித்துள்ளனர்,'' என்றார்.மங்கலம், கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் பொன்னுசாமி கூறுகையில், ''பிரதமரின் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் குறித்து, எங்கள் சங்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு இல்லை; இனிமேலாவது, விவசாயிகளை புறக்கணிக்காமல் அழைப்பு விடுக்க வேண்டும்,'' என்றார்.உ.உ.க., மாவட்ட தலைவர் சோமசுந்தரம் கூறுகையில், ''பிரதமர் நிகழ்ச்சி குறித்து பொங்கலுார், பல்லடத்திலும் தகவல் இல்லை; விவசாயிகளை புறக்கணித்துவிட்டு, யாரை வைத்து நிகழ்ச்சி நடத்தினார்கள் என்று தெரியவில்லை,'' என்றார்.மாவட்ட நிர்வாகம், தகுந்த ஆலோசனை வழங்கி, வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட உத்தரவிட வேண்டும். மாவட்டத்தில் உள்ள, 13 வட்டாரங்களில், திருப்பூர் வட்டாரத்துக்கு, தனியாக வேளாண்மை உதவி இயக்குனர் நியமிக்கப்படவில்லை. இதனால், விவசாயிகள், அதிகாரிகள் மட்டத்திலான தொடர்பு குறைவாக உள்ளதால், நிரந்தர அதிகாரி நியமிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் பொதுவான எதிர்பார்ப்பு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE