திருப்பூர்;திருப்பூர், ராயபுரம் பகுதியில், வடிகால் மீது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், வடிகால் வளைந்து அமைக்கப்படுகிறது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், ஜெய்வாபாய் பள்ளி வீதியில், 'ஸ்மார்ட் ரோடு' அமைக்கும் திட்டத்தில், ஜெய்வாபாய் பள்ளி வீதியில், மிலிட்டரி காலனி வழியாக அமைந்துள்ள பிரதான கால்வாயுடன் இணைக்கும் வகையில், மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது.
இந்த வடிகால் கட்டியுள்ள இடத்தில், ஒரு வீட்டின் உரிமையாளர், வடிகால் மீது தளம் அமைத்து அதில், தகரஷீட் வேய்ந்த கூரை அமைத்து வாகனம் நிறுத்துமிடமாக பயன்படுத்துகிறார்.ராயபுரம் ரேஷன் கடை உள்ள ரோட்டில், தற்போது வடிகால் அமைக்க குழி தோண்டியுள்ளனர். இதில், ஒரு சில வீடுகள் முன், குழி தோண்டாமல் சற்று தள்ளி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், ரோடு குறுகலாகும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளித்தும் நடவடிக்கையில்லை. 'அதிகாரிகள், இதை கண்காணித்து, உரிய வகையில் கட்டுமான பணி மேற்கொள்ள வேண்டும்' என, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:ராயபுரம் பகுதியில், வடிகால் அமைக்கும் பணிக்கு குழி தோண்டும் பகுதியில், ஏராளமான வளர்ந்த மரங்கள் உள்ளன; இவை அகற்றப்படாமல் தான் பணி நடக்கிறது.மரத்துக்கும், தற்போதுள்ள கட்டடங்களுக்கும் இடையே உள்ள பகுதியில், மின் ஒயர் மற்றும் குடிநீர் குழாய் செல்லும் வகையில் 'டக்ட்' அமைக்கப்படும்.
இந்த வடிகால் மேற்பகுதி, முற்றிலும் மூடப்படும்.ஒரு சில பகுதிகளில், குடியிருப்போர் பயன்படுத்தி வரும் இடத்துக்கு ஏற்ப, கால்வாய் கட்டுமான பணி நடக்கிறது. இங்குள்ள பெரும் பகுதி நிலம், தீர்வை ஏற்படாத தரிசு நிலம் என, ஆவணத்தில் உள்ளது.இந்நிலத்துக்கு, அப்பகுதி மக்கள், பட்டா கேட்டு அரசை அணுகியுள்ளனர். எனவே, நில அளவை பிரிவு மூலம் அளவீடு செய்து, கட்டுமானப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE