'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்...' என, கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார். சரங்கொன்றை மலரிலும், வில்வமரத்திலும், சிவனடியார் உள்ளத்திலும், சிவாம்சம் பொருந்தியிருப்பதாக, வேதபாடல்களில் சிவாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இறைவனின் ஆற்றலை கடத்தி, 'பாஸிடிவ்' எனர்ஜியை வாரிக்கொடுக்கும் செல்வமான விபூதியை, வில்வ குடுவையில் வைத்து பயன்படுத்துவது, சிவனடியார் மற்றும் சிவ பக்தர்களின் வழக்கம்.சிவாம்சம் பொருந்திய வில்வ காயின் ஓடுகளை பக்குவப்படுத்தி, வில்வ குடுவையில் தான் விபூதி வைத்து பயன்படுத்துவதே பேரானந்தத்தை கொடுப்பதாக, ஆன்மிக அன்பர்கள் கசிந்துருகுகின்றனர்.கொடுமுடி அருகே, கோவில்களில் சிவனுக்கு பூஜை கைங்கர்யம் செய்து வந்த, குகநாதசர்மா, 65 , கொரோனா ஊரடங்கு நேரத்தில், வில்வ குடுவை செய்து சிவத்தொண்டு புரிந்துள்ளார். வீட்டிலேயே முடங்கியிருந்த போது, கூட்டிலே சிவனை வைத்து இச்சேவையை செய்ததாக நெஞ்சுருக கூறுகிறார்.அவர் கூறியதாவது:சிவனடியார், வில்வ குடுவையில் விபூதியை வைத்து பயன்படுத்தி வந்தனர். ஒரு வில்வக்காயை பிரித்து பார்த்த போது, அதன் உள்ளே, சிவலிங்கம் போன்ற உருவம் இருந்ததை பார்த்து பரவசம் அடைந்தேன். அதேபோல், வில்வ மலர், அல்லிவட்டம்; சுற்றிலும் புள்ளி வட்டம் என, அதுவும் சிவ ஸ்வரூபமாக காட்சியளிக்கிறது.சில காய்களில், நந்தியம் பெருமான் போன்ற உருவமும் காட்சியளித்தது. பூஜை கைங்கர்யத்தில் இருந்து ஓய்வு பெற்றதும், ஓய்வு நேரத்தில் செய்து வருகிறேன்; இதுவரை, 300 குடுவை வடிவமைத்து கொடுத்துள்ளேன்; அவற்றில், 20 குடுவைகளின் உள்ளே, சிவலிங்கம் போன்ற உருவம் தத்ரூபமாக அமைந்திருந்தது, என்றார்.இத்தகைய சிறப்பு பெற்ற வில்வக்காய் விபூதி குடுவை குறித்து, திருப்பூர், திருவருள் ஜோதிட நிலைய பேராசிரியர் 'மீனம்' ராஜூ கூறியதாவது:விபூதி பூசுவதால், நச்சுகளை நீக்கி, உடல் உபாதைகளில் இருந்து விடுபடலாம். சிந்தனை வளம் பெற்று, புத்தி கூர்மை கிடைக்கும். சந்திரனின் ஆதிபத்யம் மேம்பட்டு, இறைசக்தியும், சிந்தனை வளமும் பெருகும். விபூதியை ஒரு மத சின்னமாக பார்க்க கூடாது; மருத்துவ பொருளாக பார்க்க வேண்டும்.மனித உடலில் உள்ள, ஆறு ஆதாரங்களை தாண்டி, மூலாதாரத்தில் கிடைக்கும் சக்தியை நிலை நிறுத்தும் சக்தி, விபூதிக்கு உள்ளது, வில்வ குடுவையில் வைக்கும் விபூதி, மகா மருத்துவ குணம் வாய்ந்தது. உடல் வெப்பத்தை தணித்து, உடல் மற்றும் மன வளத்தை மேம்படுத்தும்.அவர் கூறியதில், மனம் லயித்து விடை பெற்றோம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE