அந்தக்காலத்தில், பொழுது விடிந்தது முதல் அந்திசாயும் வரை களிப்பே இல்லாமல் உழைக்க பெரியவர்களுக்கென சில விளையாட்டுகள் இருக்கும். குட்டீஸ்களுக்கென தனி விளையாட்டு, பெண்கள் ஒன்றாக கூடி விளையாட என, வாழ்வியல் சார்ந்த தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் ஏராளம்.சிந்தனை துாண்டுவது மட்டுமல்ல, உடலில் ஒவ்வொரு பாகங்களையும் இயங்க வைக்கும் தன்மை, நம் மரபுசார் விளையாட்டுகளுக்கே உண்டு. 'பஜ்ஜி' சாப்பிட்டுக்கொண்டே, 'பப்ஜி' விளையாடும் இன்றைய தலைமுறையினர் இதனை உணர வாய்ப்பில்லை என்றாலும், திருப்பூரை சேர்ந்த சிறுவன் கவின், மரபுசார் பொம்மைகளை உருவாக்கியதுடன், பள்ளி கல்வித்துறையின், 'கலா உற்சவ்' போட்டியில் தமிழக அளவில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளான்.ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் கவினிடம் பேசியபோது...பள்ளி மாணவர்களுக்கான, 'கலா உற்சவ்' போட்டி அறிவிப்பு வெளியானதும், 'பாரம்பரிய பொம்மைகள்' என்ற தலைப்பை தேர்வு செய்தேன். இதுகுறித்து இணையத்தில் தேடும் போது ஒரே ஆச்சர்யம்.பெரும்பாலானவை எனக்கு அறிமுகமில்லாத விளையாட்டுகள். நானே சில பொம்மைகளை செய்தேன். தேங்காய் குரும்பையில் குச்சியை சொருகி, அவற்றை வளைத்து, ஊடாக ஒரு குச்சியை விட்டு சுழற்றினால், 'டிக் டிக்' என சத்தம் வரும். குழந்தையின் அழுகையை நிறுத்தும் கிலுகிலுப்பு பொம்மை இதிலிருந்துதான் வந்திருக்கும்.களிமண்ணில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, மரத்துண்டில் தாயக்கட்டை, பனை ஓலையில் மீன், பிளாஸ்டோ பாரிசில் சரஸ்வதி என பொம்மைகளை வடிவமைத்து போட்டிக்கு அனுப்பினேன்.தமிழக அளவில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. இதன்பிறகு எனக்கும் பாரம்பரிய விளையாட்டுகள் மேல் ஆர்வம் பல மடங்கு அதிகரித்துள்ளது. மொபைல் கேம்ஸ் பக்கம் நாட்டம் செல்வதில்லை. இந்த மாற்றம் அனைவரிடமும் வர வேண்டும். பப்ஜியை விடுத்து, நம் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்' என்றார்.படிப்படியாக தமிழ் பாரம்பரிய விளையாட்டுக்களை மறந்த சமூகமாக நாம் மாறியிருக்கும் வேளையில், கவினின் இம்முயற்சி பாராட்டத்தக்கதே!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE