சேலம்: மூடியிருந்த, இரும்பு உருக்கு ஆலைக்குள் கைவரிசை காட்டிய, கொள்ளை கும்பலில், ஐந்து பேரை, போலீசார் கைது செய்து, 15 பேரை தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், கருப்பூர், கோட்டகவுண்டம்பட்டியில், 60 ஏக்கரில், '?ஹடெக் மினரல் இண்டஸ்ட்ரீஸ், கோவை' பெயரில், தனியார் இரும்பு உருக்காலை இருந்தது. மூடப்பட்ட, அந்த ஆலையில், 11 காவலாளிகள், இரவு காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த நவ., 9 நள்ளிரவில், இரு மாருதி வேன், லாரியில் வந்த, 20 பேர் கும்பல், 11 பேரையும் சரமாரியாக தாக்கி, மொபைல் போனை பறித்துக்கொண்டு, அனைவரையும், ஒரே அறைக்குள் வைத்து பூட்டியுள்ளனர். பின், அங்குள்ள மின்மாற்றியை கழற்றி, அதிலிருந்த காப்பர் பிளேட், ஒயர்கள், காப்பர் கம்பிகளை திருடி, லாரியில் ஏற்றிக்கொண்டு, கொள்ளை கும்பல் தப்பியது. இதுதொடர்பாக, கருப்பூர் போலீசார், நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். குற்றப்பிரிவு உதவி ஆணையர் பூபதிராஜன் மேற்பார்வையில் தனிப்படையினர் விசாரித்ததில், இதுபோன்ற சம்பவம், திருப்பூர் மாவட்டம், சேவூரில் நடந்ததும், குற்றவாளிகள் இருவர் கைதானதும் தெரிந்தது. அதில், வாலிபர் ஜெயபிரகாஷ், 20, தலைமையில், இரு இடங்களில் கைவரிசை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கும்பலை சேர்ந்த, திருப்பூர், சிறுமுகையை சேர்ந்த கருப்புசாமி, 39, பிரபாகர், 33, பெரியவன், 24, கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட, சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி, முனியாண்டி மகன் சங்கர், 33, குகை, பஞ்சந்தாங்கி ஏரி, ஆறுமுகம் மகன் சரவணன், 22, ஆகியோரை, நேற்று, போலீசார் கைது செய்தனர். கொள்ளைக்கு பயன்படுத்திய உருட்டுக்கட்டை, இரும்பு ராடு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள, 15 பேரை, தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE