ஓசூர்: மகளிர் சக்தி விருது பெற விண்ணப்பிக்கலாம் என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம், பின்தங்கிய மற்றும் பாதிப்படைந்தவர்களுக்கு, சேவை புரியும் பெண்களை அங்கீகரிக்க, 'மகளிர் சக்தி' என்ற மகளிருக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. பெண்களுக்கான சுகாதாரம், ஆற்றுப்படுத்துதல், சட்ட உதவி, விழிப்புணர்வு, கல்வி, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள், வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாகுபாடு, துன்புறுத்துதல், பெண் குழந்தை பாலின விகிதத்தில் முன்னேற்றம் போன்றவற்றில், தலைசிறந்த பங்களிப்புடன் சேவை புரிந்த பெண்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்க, இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கான விரிவான வழிகாட்டும் நெறிமுறைகள், மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின், www.narishaktipuaskar.wcd.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. தகுதி வாய்ந்த தனிநபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோர் இணையதளம் வழியாக, வரும், 7க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, சர்வதேச மகளிர் தினத்துக்கு முந்தைய வாரத்தில், டில்லியில் ஜனாதிபதியால் இந்த விருது வழங்கப்படும். இது தொடர்பாக மேலும் தகவல் பெற, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறை எண், 21ல் இயங்கும், மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE