ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, விவசாய பயிர்களை, யானைகள் கூட்டம் நாசம் செய்த நிலையில், வனத்துறையினரிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட நொகனூர் காப்புக்காட்டில், ஏராளமான யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 20க்கும் மேற்பட்ட யானைகள், உச்சனப்பள்ளி கிராமம் அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து, விவசாயி ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் ராகி, கிருஷ்ணனுக்கு சொந்தமான நான்கு ஏக்கர் ராகி, ராமதாசுக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் காலிபிளவர் என, பல ஏக்கரில் விளைந்திருந்த விவசாய பயிர்களை நாசம் செய்தன. அத்துடன், விவசாய நிலங்களில் இருந்த, சொட்டுநீர் பாசன குழாய் ளையும் சேதப்படுத்தின. நேற்று காலை விவசாய நிலத்துக்கு சென்ற விவசாயிகள், பயிர்கள் சேதமாகி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் விவசாய நிலங்களுக்கு சென்று, சேதமான பயிர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, உரிய இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும். யானைகளை, கர்நாடகா மாநில வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என, வனத்துறையினரிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE