சேலம்: லஞ்ச பணம் வைத்திருந்த வழக்கில் சிக்கிய சார் பதிவாளரை, நீதிமன்ற வழக்கில் இருந்து தப்ப வைப்பதாக கூறி, 2.35 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, ஊராட்சி முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டார்.
சேலம், சூரமங்கலம், சார் பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி., சந்திரமவுலி தலைமையில், மூன்று இன்ஸ்பெக்டர் உள்பட, 13 பேர் அடங்கிய குழுவினர், கடந்த அக்., 16ல் சோதனை நடத்தினர். மாலை, 4:10 மணி முதல், மறுநாள் காலை, 7:00 மணி வரை சோதனை நடத்தி, கணக்கில் வராத, 2.54 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, சார் பதிவாளர் கனகராஜ், 46, பணி தொகுப்பு ஊழியர் ஜெயந்தி, 44, தற்காலிக ஊழியர் சீனிவாசன், 34, ஆகியோர் மீது, லஞ்ச பணம் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் மீது, துறை நடவடிக்கை மேற்கொள்ள ஆவணங்கள் பரிந்துரைக்கப்பட்டு, மேல் நடவடிக்கை நிலுவையில் உள்ளது. இதன் எதிரொலியாக, கனகராஜ், கன்னியாகுமரிக்கு இடமாற்றப்பட்டார். சேலம், ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் அம்மாசி, 53; கொங்குபட்டி ஊராட்சி முன்னாள் தலைவர். தற்போது, ரியல் எஸ்டேட் புரோக்கரான இவர், அடிக்கடி, தொழில் நிமித்தமாக, சார் பதிவாளர் அலுவலகம் சென்றபோது, கனகராஜூடன் பழகி உள்ளார். இதனால், அவர் மீதான வழக்கை, நீதிமன்றம் செல்வதை தடுக்க, லஞ்ச ஒழிப்பு போலீசார் மூலம், உதவி செய்வதாக கூறி, 15 பவுன் தங்க நகை கேட்டு, ஒரு மாதமாக பேரம் பேசி வந்தார். பின், 10 பவுன் என முடிவு செய்து, 5 பவுனுக்கான தொகை, 2.35 ரூபாயை, நேற்று அழகாபுரத்தில், கனகராஜிடம் வாங்கும்போது, அம்மாசி, கையும், களவுமாக சிக்கி, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர், ஊராட்சி தலைவராக இருந்தபோது, அரசு நிதி, பல லட்சம் ரூபாய், மோசடி செய்த வழக்கு நிலுவையில் இருப்பதாக, போலீசார் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE