புதுடில்லி: பொது மக்கள், அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம் என, புத்தாண்டு தினத்தில் உறுதியேற்று கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை பிரதமர் மோடி ' மன் கி பாத் ' நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான கடைசி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : இன்னும் 4 நாட்களில் 2021ம் ஆண்டு துவங்க உள்ளது. இன்றைய மனதின் குரல் ஒரு வகையில் 2020ம் ஆண்டின் நிறைவான மனதின் குரலாக ஒலிக்கும். அடுத்த மனதின் குரல் 2021ம் ஆண்டில் துவங்கும். இன்றைய நிகழ்வில் கடந்த ஆண்டின் அனுபவங்களும், 2021ம் ஆண்டிற்கான உறுதிமொழிகளும் உள்ளது. நமது நாடு 2021ம் ஆண்டில், வெற்றிகளின் புதிய சிகரங்களை தொட வேண்டும். உலகத்தில் இந்தியாவிற்கு என ஒரு அடையாளம் ஏற்படுத்த வேண்டும். நாடு வலிமை பெற்றதாக மாற வேண்டும்.
நமது நாட்டில், சவால்களுக்கும், சங்கடங்களுக்கும் குறையேதும் இல்லை. கொரோனா காரணமாக உலகில் விநியோகச் சங்கிலி நோய் தொடர்பான பல இடையூறுகள் ஏற்பட்டன. ஆனால், நாம் இவையனைத்திலும் இருந்து தற்சார்பு என்ற புதிய கற்றலை பெற்றோம். நாம் தன்னிறைவு இந்தியாவை ஆதரிக்கிறோம். அதனால், நமது தயாரிப்பாளர்களும் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தங்களது தயாரிப்புகளில், தரம் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற குரல வீடுகள்தோறும் எதிரொலிக்க துவங்கிவிட்டது. நமது பொருட்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். எவை உலக அளவில் சிறந்து உள்ளனவோ அவை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும். இதற்கு நமது, உற்பத்தியாளர்களும், தொழில்முனையும் நண்பர்களும் முன் வர வேண்டும். 'ஸ்டார்ட் அப்'களும் முன்வரவேண்டும். இதுவே உற்பத்தியாளர்கள், தொழில்துறையினருக்கு நான் விடுக்கும் வேண்டுகோள்.
பொது மக்கள், அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் அந்நிய பொருட்களுக்கு மாற்றாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்தியர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவோம் என முடிவு செய்வோம். இந்த முறை நமது தேசத்தின் பொருட்டு நாம் கண்டிப்பாக இப்படி ஒரு உறுதியை மேற்கொள்வோம்.

பழமையான கலாசாரம், பண்பாடு நமது வழிமுறைகள் ஆகியவற்றை, ஆயிரகணக்கான ஆண்டுகள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்க நாடு எத்தனையோ தியாகம் செய்துள்ளது. இவற்றையெல்லாம் நாம் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். குரு கோவிந்த் சிங் அவர்களின் மகன்களான ஜோராவர் சிங்குக்கும், பதே சிங்குக்கும் இன்றைய நாள் தான் உயிரோடு சமாதி கட்டப்பட்டது. மரணம் கண் முன், தாண்டவமாடிய போதும் அவர்கள் கலங்கவில்லை. பல உயிர் தியாகங்கள் தான் நாட்டை இன்றைய வடிவத்தில் பாதுகாத்தும், பராமரித்தும் வைத்துள்ளன.
நாம் மனிதர்களை சுமக்கும் சக்கர நாற்காலிகளை பார்த்துள்ளோம். ஆனால், கோவையை சேர்ந்த காயத்ரி என்ற பெண், தனது தந்தையுடன் இணைந்து பாதிக்கப்பட்ட ஒரு நாய்க்காக ஒரு சக்கர நாற்காலி ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த புரிந்துணர்வு உத்வேகம் அளிக்கிறது. அனைத்து உயிர்களிடத்தும் தயவும், கருணையும் மனதில் நிறைந்திருந்தால் மட்டுமே இப்படி ஒருவரால் செய்ய முடியும். இளைஞர்களிடம், என்னால் முடியும் என்ற அணுகுமுறையும், செய்தே தீருவேன் என்ற உணர்வும் உள்ளது. இவர்களுக்கு, எந்த ஒரு சவாலும் பெரியதே அல்ல.
தமிழகத்தின் விழுப்புரத்தை சேர்ந்த ஹேமலதா என்பவர் மிகத் தொன்மையான மொழியான தமிழை கற்று கொடுத்து வருகிறார். கொரோனா காலத்தில், மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தர ஒரு புதிய வழியை முயற்சித்துள்ளார். புத்தகத்தின் அனைத்து அத்தியாயங்களையும் அனிமேஷன் வீடியோவாக மாற்றி, பென்டிரைவ் மூலம் மாணவர்களுக்கு விநியோகம் செய்ததுடன், தொலைபேசி மூலமும் கற்று கொடுத்துள்ளார். இதேபோல், இந்த படிப்புகளை கல்வி அமைச்சகத்தின் திக்ஷா தளத்தில் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து ஆசிரியர்களிடமும் கேட்டு கொள்கிறேன்.
தமிழகத்தை சேர்ந்த 92 வயதான ஸ்ரீஸ்ரீநிவாஸாச்சாரியார் சுவாமி, தற்போதும் கணினியில் தனது புத்தகத்தை எழுதி வருகிறார். தானே தட்டச்சும் செய்கிறார். எதுவரை வாழ்க்கை ஆற்றல் நிரம்பியதாக உள்ளதோ, அதுவரை வாழ்க்கையில் கற்கும் பேரார்வம் இறப்பதில்லை. கற்று கொள்ளும் விருப்பமும் மரிப்பது இல்லை.
நாம் குப்பையை ஏற்படுத்த மாட்டோம் எனவும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருளில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என உறுதியேற்போம். இதையே புத்தாண்டுக்கான வாழ்த்துகளாக தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE