ரத்தப் பரிசோதனை துறையில், வியத்தகு வளர்ச்சி கண்டுள்ள, 'தைரோகேர் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் நிறுவனர், வேலுமணியின் மகள் அம்ருதா, தந்தையிடம் தான் கற்றதையும், தானாக பெற்றதையும் பற்றி கூறுகிறார்:
என் வாழ்க்கையில், அப்பா தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். மும்பையில் உள்ள, பாபா அடாமிக் ரிசர்ச் சென்டரில், 15 ஆண்டுகள், அப்பா வேலை பார்த்தவர். அந்த அனுபவத்துடன், ரத்தப் பரிசோதனை ஆய்வகத்தை துவங்கினார்.அவர் அந்த நிறுவனத்தை துவங்கிய, 25 ஆண்டுகளுக்கு முன், தைராய்டு நோய்க்கான பரிசோதனை கட்டணம், 800 ரூபாய், இப்போது, 400 ரூபாய் தான்.
மும்பையில், வீட்டில் சிறிய அளவில் துவங்கிய பரிசோதனை கூடம் தான், இப்போது மிகப் பிரமாண்டமாக வளர்ந்துள்ளது.இதற்கு பின்னணியில் அப்பாவின் உழைப்பு உள்ளது. அப்பா எனக்கு எதையும் சொல்லித் தரமாட்டார். அவரிடம் ஏதாவது ஒரு சந்தேகம் கேட்டால், 'உன்னை புத்திசாலின்னு நினைச்சேனே...' என்பார். அடுத்த முறை கேட்கத் தோணாது; அறிந்து கொள்ள தோணும்.என்னிடமும், என் அண்ணனிடமும் அப்பா எப்போதும் கேள்விகள் கேட்டு கொண்டே இருப்பார். இது, எங்களின் தேடல் திறனை அதிகரித்தது.
பிளஸ் 2 முடித்ததும், அப்பாவின் கம்பெனியில் வேலை செய்ய துவங்கினேன்.எனக்கு குறிப்பிட்ட வேலையை கொடுத்து, அதை நான் எப்படி செய்கிறேன் என, அப்பா பார்ப்பார். முதலில், எச்.ஆர்., எனப்படும், மனித வளத்துறையில் வேலை பார்த்தேன். கல்லுாரியில் படித்தபடியே, அந்த பிரிவில் வேலை பார்த்தேன். அதன்பின் படிப்படியாக பயிற்சி, அட்மின், ஈவென்ட்ஸ், டெவலப்மென்ட், ஐ.டி., தகவல் தொடர்பு, பர்சேஸ் என, ஒவ்வொரு துறையாக கற்றுக் கொண்டேன்.
இப்போது, இந்த இளம் வயதில், எங்கள் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளேன். எங்கள் நிறுவனம் தான் என்றாலும், தலைமைப் பொறுப்பை நானாக எடுத்துக் கொள்ள விரும்ப வில்லை. குழுவில் ஒருத்தியாக இருக்கவே விரும்புகிறேன்.வீட்டில் என்னை, சராசரி பெண் போல வளர்க்கவில்லை. அண்ணனை போலவே எனக்கும் சமவேலை, அந்தஸ்து தரப்பட்டது.
அதனால், 'இவ பொம்பளை தானே; இவ சொல்லியா நாம கேட்கிறது?' என, யாரும் எங்கள் நிறுவனத்தில் கேட்காத அளவுக்கு, 'உங்களுக்காக நான் இருக்கிறேன்னு' சொல்ற வகையில், குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறேன். பங்குச்சந்தையில் எங்கள் நிறுவனம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த நேரத்தில், எங்கள் பங்கின் விலை, 500 ரூபாயாக இருந்தது. இப்போது, 1,000 ரூபாயாக உயர்ந்து உள்ளது. இப்போதைய, 1,700 பணியாளர்களை, 3,000 ஆக உயர்த்துவது தான் என் குறிக்கோள்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE