இம்பால்:''வட கிழக்கு மாநிலங்கள், பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தில் மிகவும் நெருக்கமாக உள்ளன. அதனால்தான், வளர்ச்சிப் பணிகள் என்ற வெள்ளம், அங்கு பாய்ந்து உள்ளது,'' என, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பெருமையுடன் குறிப்பிட்டார்.
வட கிழக்கு மாநிலங்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணம் மேற்கொண்டு உள்ளார். பா.ஜ.,வைச் சேர்ந்த, பீரேன் சிங் முதல்வராக உள்ள, மணிப்பூரில் நேற்று பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைத்து, அமித் ஷா பேசியதாவது:மணிப்பூர் என்றால், போராட்டங்கள், பந்த், கடையடைப்பு என, ஒரு காலத்தில் அறியப்பட்டது. முந்தைய காங்கிரஸ் அரசு, இந்த மாநில மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதே நேரத்தில், வட கிழக்கு மாநிலங்கள், பிரதமர், மோடியின் இதயத்தில் உள்ளன. அதனால், இங்கு, வளர்ச்சிப் பணிகள், வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகின்றன. முதல்வர், பீரேன் சிங் ஆட்சியில், மணிப்பூர் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. பிரிவினைவாதிகள் பெரும்பாலானோர், மாநில வளர்ச்சிப் பணிகளில் இணைந்துள்ளனர். விடுபட்டுள்ள ஒரு சிலரும், தேசிய நீரோட்டத்தில் இணைவர் என்ற முழு நம்பிக்கை உள்ளது.
மாநிலத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு, பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு, 'இன்னர் லைன் பர்மிட்' எனப்படும், முன் அனுமதி பெறுவதை கட்டாயமாக்கிஉள்ளார், மோடி. மற்ற வடகிழக்கு மாநிலங்களில் இந்த நடைமுறை உள்ளபோது, மணிப்பூரில் இல்லை என்பதை அறிந்ததும், உடனடியாக அதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் கேட்காமலேயே, இது செயல்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக அசாமில், தன் பயணத்தின்போது, அங்கு நிலாச்சல் மலையில் அமைந்துள்ள சக்திபீட காமாக்யா கோவிலில், அமித் ஷா வழிபட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE