'தமிழகத்தில், 12 மாவட்டங்களில், 65 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட, 1,800 ஓட்டுச்சாவடிகள், மத ரீதியில் பதற்றமானவை' என, தேர்தல் கமிஷனால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு மத மற்றும் ஜாதி மோதலை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த தொகுதிகள், போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துள்ளன.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி சட்டசபைகளுக்கு, ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. தமிழகத்தில், உள்ள, 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.ஏற்கனவே, இது தொடர்பாக, தேர்தல் கமிஷனில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
தேர்தல் கமிஷன் உயரதிகாரிகள், சமீபத்தில் தமிழகம் வந்து, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். கட்சி பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தினர்.தேர்தல் நடத்துவதற்காக, தமிழக அரசு அதிகாரிகள் தயார் நிலையில் இருப்பது தொடர்பாக, அப்போது ஆய்வு செய்யப்பட்டது.
ஆலோசனை
இந்த ஆலோசனைக்கு பின், டில்லி திரும்பிய தேர்தல் ஆணைய உயரதிகாரிகள், மற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதில், தமிழகத்தில் உள்ள நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.கடந்த தேர்தல் அனுபவத்தின் அடிப்படையிலும், தற்போதுள்ள சூழ்நிலையையும் கருத்தில் வைத்து, இந்த ஆய்வு நடத்தப்பட்டது.அதில், 'தமிழகத்தில், 12 மாவட்டங்களில், 65 சட்டசபை தொகுதிகளில் உள்ள, 1,800 ஓட்டுச்சாவடிகள், மத ரீதியில் பதற்றமானவை' என, பட்டியலிடப்பட்டுள்ளன.
இதுதொடர்பான தகவல்களை, தமிழக போலீசாருடன், தேர்தல் கமிஷன் பகிர்ந்துள்ளது.இது குறித்து, தேர்தல் கமிஷன் உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:கடந்த சட்டசபை தேர்தலின்போது, தமிழகத்தில், 65 ஆயிரத்து, 616 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தற்போது, கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால், கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. கடந்த தேர்தல் தொடர்பான தகவல்கள், பதிவுகளுடன், தற்போதுள்ள சூழ்நிலை ஒப்பிடப்பட்டு, பதற்றமான ஓட்டுச்சாவடிகள் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளது.
அதன்படி, 65 சட்டசபை தொகுதிகளில் உள்ள, 1,800 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என, அடையாளம் காணப்பட்டுள்ளன. 'இந்த ஓட்டுச்சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், தேர்தல் நடைமுறைகளை மேற்கொள்வதற்கு முன், கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, தமிழக போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத ரீதியில் மோதல்
தமிழகத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது. அதன்படி, இந்த பகுதிகளில் உள்ள பல்வேறு மதத்தினர் இடையே, அமைதி கூட்டத்தை நடத்தி, அவர்களுடைய ஒத்துழைப்பை, மாநில போலீசார் நாட வேண்டும்.மத ரீதியில் மோதல், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் வாய்ப்புள்ள பகுதிகள் என, தனித்தனியாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுக்காக பணம் அளிப்பதை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், தமிழக போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேர்தல் நடவடிக்கைகள் துவங்குவதற்கு முன்பாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கவே, இந்தப் பட்டியல் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.தேர்தல் கமிஷனின் இந்த அறிக்கையை தொடர்ந்து, குறிப்பிட்ட, 65 தொகுதிகள், தற்போது, தமிழக போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துள்ளன.
-டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE