புதுடில்லி:வேளாண் சட்டங்கள் தொடர்பாக, மத்திய அரசுடன் நாளை பேச்சு நடக்க உள்ள நிலையில், கடும் குளிரிலும், பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.
மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு, ஐந்து சுற்று பேச்சு நடத்தியது. 'குறைந்தபட்ச ஆதார விலை முறை தொடரும்' என, மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், 'வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்' என, விவசாய சங்கப் பிரதிநிதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, ஆறாவது சுற்று பேச்சு, நாளை நடக்க உள்ளது. இந்நிலையில், டில்லி எல்லையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. கடும் குளிரிலும், சிங்கு, காஜிபுர், டிக்ரி எல்லைகளில், விவசாயிகள் போராட்டத்தை தொடர்கின்றனர்.சிங்கு எல்லையில் போராட்டம் நடத்திய, 32 வயதான விவசாயி ஒருவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் போராட்டத்தால், டில்லியில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. அதனால், டில்லியின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
151 'டவர்'கள் சேதம்
வேளாண் மசோதாக்கள், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானிக்கு பலன் அளிப்பதாக, பொய் செய்திகள் பஞ்சாபில் பரவியுள்ளன. அதனால், முகேஷ் அம்பானியின், 'ரிலையன்ஸ் ஜியோ' தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு சொந்தமான, 'டவர்'கள் சேதப் படுத்தப்பட்டு வருகின்றன.
இதுவரை, 1,338 டவர்கள் சேதமடைந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'இவ்வாறு வன்முறையில் ஈடுபட வேண்டாம்' என, காங்.,கைச் சேர்ந்த, பஞ்சாப் முதல்வர், அமரீந்தர் சிங், வேண்டுகோள் விடுத்தார்.ஆனால், அதை மீறி, நேற்று முன்தினம் மட்டும், 151 டவர்களை, போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
கேரளாவில் இருந்து அன்னாசி பழம்
விவசாயிகள் போராட்டத்துக்கு, காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ள கேரளா வில் இருந்து, 16 டன், அன்னாசி பழங்கள், போராட்டத்தில் உள்ள விவசாயிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கேரளாவின் வழக்குளத்தில் இருந்து, டிரக் மூலமாக இவை அனுப்பி வைக்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE