புதுடில்லி:''வெளிநாட்டு தயாரிப்புகளுக்கு பதிலாக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்துவோம் என்பதை, ஆங்கில புத்தாண்டு உறுதிமொழியாக, ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதமும், கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை, 11:00 மணிக்கு, வானொலி வாயிலாக, 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இந்த ஆண்டின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான, 'மன் கி பாத்' நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:சுயசார்பு இந்தியாவின் அவசியத்தை, நிறைவடையப்போகும் இந்த ஆண்டு, நமக்கு மிக அழுத்தமாக உணர்த்தியுள்ளது. அதன் தேவை, சமூகத்தின் அனைத்து தரப்பிலும் எதிரொலிக்கின்றது.இந்த நேரத்தில், நம் உள்நாட்டு தயாரிப்பு பொருட்கள், உலகத் தரத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.நாம் ஒவ்வொருவரும், நம் தினசரி வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களை பட்டியலிட வேண்டும். அதில், வெளிநாட்டு தயாரிப்புகள் எத்தனை உள்ளன என்பதை கண்டறிந்து, அந்த பொருட்களுக்கு இணையான, நம் உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த துவங்க வேண்டும்.
நம் நாட்டு தொழிலாளர்களின் வேர்வையிலும், உழைப்பிலும் தயாரான பொருட்களை பயன் படுத்துவதை நாம் பழக்கமாக கொள்ள வேண்டும். இதை, ஆங்கில புத்தாண்டு தினத்தில், அனைவரும் உறுதிமொழியாக ஏற்க வேண்டும்.பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில், அவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பதை குறிப்பிட்டு, விற்பனை செய்யும் போக்கை காண முடிகிறது.மக்களும், அது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதா என்பதை கேட்டு வாங்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. ஒரே ஆண்டில், மக்கள் மனதில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமாக இதை காண்கிறேன்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஒருமுறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களினால் உண்டாகும் பிரச்னைகள் குறித்து, இந்தாண்டு விரிவாக விவாதிக்க முடிய வில்லை. வரும் ஆண்டில், அதை ஒழிக்க உறுதி ஏற்போம்.இவ்வாறு, அவர் கூறினார். தமிழகத்தை சேர்ந்தவர்களுக்குநரேந்திர மோடி பாராட்டுநிகழ்ச்சியில், கோவையைச் சேர்ந்த காயத்ரி என்ற இளம்பெண், தன் தந்தையுடன் இணைந்து, விலங்குகளுக்கான சக்கர நாற்காலியை வடிவமைத்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். அந்த சிறுமிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த ஹேமலதா என்ற ஆசிரியை, கொரோனா காலத்தில் புதுமையான முறையில் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்தார். 'அனிமேஷன்' முறையில் எளிதாக புரியும் வகையில், பாடங்களை அவர் வடிவமைத்ததாக கூறினார். சீனிவாச ஆச்சாரியா என்ற, 92 வயது அறிஞரின் பணியையும், பிரதமர் மோடி பாராட்டினார். சீனிவாச ஆச்சாரியா, தான் எழுதிய பழமையான புத்தகங்களை, கணினியில் பதிவேற்றம் செய்யும் உன்னதமான பணியில் ஈடுபட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE