சென்னை: ரத்த அழுத்த பிரச்னையால், ஐதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினி, சிகிச்சை முடிந்து, சென்னை திரும்பினார். ஏற்கனவே திட்டமிட்டபடி, 31ம் தேதி கட்சி துவங்கும் அறிவிப்பை வெளியிடுவாரா என, ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நடிகர் ரஜினி நடிக்கும், அண்ணாத்த படப்பிடிப்பு, ஐதராபாதில் நடந்தது. படக்குழுவினருக்கு கொரோனா தொற்று பரவியதால், படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.பரிசோதனையில், ரஜினிக்கு கொரோனா தொற்று இல்லை என, உறுதியானது. ஆனாலும், அவருக்கு ஏற்பட்ட படபடப்பு காரணமாக, ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டு, ஐதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில், ரஜினி அனுமதிக்கப்பட்டார்.
மூன்று நாட்கள் சிகிச்சையில் இருந்த ரஜினி, நேற்று, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.அவர், சிறப்பு விமானத்தில், நேற்று மாலை சென்னை திரும்பினார். 'ஒரு வாரம் ஓய்வில் இருந்து, ரத்த அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டும்; அதிக பணியை மேற்கொள்ள வேண்டாம்' என, டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதன் காரணமாக, ஏற்கனவே திட்டமிட்டபடி, வரும், 31ம் தேதி, கட்சி அறிவிப்பை வெளியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறுகையில், 'கட்சி துவங்குவதற்கான அறிவிப்பை, வீட்டில் இருந்தே வெளியிட வாய்ப்புள்ளது. கட்சி துவக்கம்; கொடி அறிமுக மாநாடு வேண்டுமானால், சற்று தள்ளி போகலாம். எனினும், மனதில் பட்டதை தான் ரஜினி செய்வார்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE