சென்னை:''அ.தி.மு.க., தலைமையில் தான் கூட்டணி; இ.பி.எஸ்., தான் முதல்வர். ஆட்சியில் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. தேசியகட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும், கூட்டணி ஆட்சி என்று சொல்லிக் கொண்டு, கூட்டணிக்கு வர வேண்டாம்,'' என,அ.தி.மு.க., பிரசார பொதுக்கூட்டத்தில், முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆவேசத்துடன் பேசினார்.
சென்னையில் நேற்று நடந்த, அ.தி.மு.க., தேர்தல் பிரசார துவக்க பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது:வரும் சட்டசபை தேர்தல், அதிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். கடந்த, 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில், நம்மை வழிநடத்தி சென்ற தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இல்லை. இவர்களை எதிர்த்து அரசியல் செய்த, கருணாநிதியும் இல்லை.
சந்தர்ப்ப சூழ்நிலை
இந்த சூழ்நிலையில், இந்த தேர்தலில் எப்படியாவது, நாம் இடையில் புகுந்து வெற்றி பெற்று விடலாம் என, பலர் பல விதமாக கணக்குகளை போடுகின்றனர்.தமிழக அரசியல் வரலாறும், இந்திய துணை கண்ட அரசியல் வரலாறும் மிகவும் மாறுபட்டன.தமிழகம், ஈ.வெ.ரா.,விதைத்த மண். ஏழை மக்களை, அடிமை தனத்திலிருந்து, மேலே கொண்டு வர வேண்டும் என்பதற்காக, பகுத்தறிவு இயக்கத்தை, ஈ.வெ.ரா., உருவாக்கினார்.
அவரிடம் பாடம் படித்தவர் அண்ணாதுரை. பகுத்தறிவு கொள்கைகளை சட்டமாக கொண்டு வர வேண்டும் என்பதற்காக, அரசியல் கட்சி துவக்கினார். அண்ணாதுரை, தி.மு.க.,வை நட்டு வைத்தார்.அந்தச் செடி, அண்ணா துரை கொள்கை, எம்.ஜி.ஆர்., பரப்புரையால் குறுகிய காலத்தில், 1967ல் ஆட்சிக்கு வந்தது.
கடந்த, 50 ஆண்டுகளாக, எந்த தேசிய கட்சியையும் தமிழகத்திற்குள் வர விடாமல், திராவிட இயக்கங்கள் ஆட்சியில் உள்ளன.இதை, இப்போதைய சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி, உள்ளே நுழைகின்ற அரசியல் கண்மூடிகள் புரிந்து கொள்ள வேண்டும்.அண்ணாதுரையின் வாரிசு எம்.ஜி.ஆர்., என்பதை மக்கள் ஏற்று, ஆட்சி யில் அமர்த்தினர். அவர் மறைவுக்கு பின், கட்சியில் குழப்பங்கள். ஜெ., கட்சியை காப்பாற்றி, மீண்டும் ஆட்சியில் அமர வைத்தார். தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றினார்.
அவரது மறைவுக்கு பின், நம் கட்சியின் தொண்டர்களே தலைவர்கள். இங்கு வாரிசு அரசியல் கிடையாது. ஜெ., மறைவுக்கு பின், நாம் அனைவரும் ஒன்றாக கூடினோம். ஜனநாயக முறைப்படி, ஓ.பி.எஸ்., -- இ.பி.எஸ்., ஆகியோரை தலைவர்களாக ஏற்றோம்.அவர்கள் வழியில் பயணிக்க தயாராக உள்ளோம்.
கருங்காலிகள்
இந்நிலையில், சில கருங்காலிகள், திராவிட கட்சிகள், தமிழகத்தை சீரழித்து விட்டதாக கூறுகின்றனர். சில தேசிய கட்சிகளும் கூறுகின்றன. இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கும் ஒரு கூட்டம், அப்படி கூறுகிறது.தமிழகம் இந்த ஆண்டு, பல்வேறு துறைகளில், மத்திய அரசின் தேசிய விருதுகளை பெற்றுள்ளது. அப்படியென்றால், எவ்வளவு திறமையான ஆட்சி நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
திராவிட கட்சியின் சொந்தக்காரர் கருணாநிதி இல்லை. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., ஆகியோர் தான்.தி.மு.க.,வில், கருணாநிதி மறைவுக்கு பின், தலைவர் பதவியை ஸ்டாலின் அபகரித்தார். மூத்த தலைவர்கள் பதவிக்கு வர முடியவில்லை. ஸ்டாலின் தனக்கு பக்கபலமாக, தன் மகனை அருகில் அமர வைத்துள்ளார்.
வாரிசு அரசியலுக்கு சொந்தக்காரரான தி.மு.க., நமக்கு எதிரில் உள்ளது. இந்த எதிர்ப்பில், நாம் முனைப்போடு இருக்க வேண்டும். ஜெ., மறைந்த பின் நடந்த, நான்கு ஆண்டு கால ஆட்சியில், அனைத்து திட்டங்களும் உச்சியை தொட்டுள்ளன. அனைத்திலும் முதன்மையாக இருக்கிற தமிழகத்தில், 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சி உள்ளது.
வரும் தேர்தலில் கடுமையாக உழைத்து, வெற்றி பெறுவோம். ஜெ., சூளுரைத்தது போல, இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற்றால், அடுத்த, 50 ஆண்டுகள் அ.தி.மு.க., ஆட்சி தான்.எந்த தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும், யார் வந்தாலும், அ.தி.மு.க., தலைமையில் தான் கூட்டணி. அ.தி.மு.க., தலைமையில் தான் ஆட்சி.பழனிசாமி., தான் முதல்வர். கூட்டணி அமைச்சரவை என்று கூறி வந்தால், தயவு செய்து சிந்தித்து கொள்ளுங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.
துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேசியதாவது:ஜெ., வழியில், இ.பி.எஸ்., பல சாதனைகள்செய்துள்ளார். 'குடி மராமத்து' திட்டம் கொண்டு வந்துள்ளார்.பொங்கல் பரிசு, 2,500 ரூபாய், 'அம்மா மினி கிளினிக்' என, பல திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். இது போன்ற திட்டங்களை, அ.தி.மு.க.,வால் மட்டுமே கொடுக்க முடியும்.
ஊழல் குறித்து பேச, தி.மு.க.,விற்கு எந்த தகுதியும் இல்லை.அ.தி.மு.க., ஆட்சி, ஜெ., எண்ணப்படி தொடர வேண்டும். நாம் ஒற்றுமையோடு இருந்தால், நம்மை யாராலும் அசைக்க முடியாது. இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE