சென்னை: 'பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, மாவட்ட வாரியாக, தனி நீதிமன்றம் அமைத்து, உடனே தண்டனை வழங்க, தி.மு.க., ஆட்சி அமைந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:பெண் குழந்தைகள் பாதுகாப்பில், பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையும், கவனமும் செலுத்த வேண்டும் என, இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.பெண் குழந்தைகள் மட்டுமின்றி, பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க, தி.மு.க., ஆட்சி அமைந்ததும், மாவட்ட ரீதியாக தனி நீதிமன்றம் அமைக்கப்படும். ஒரு நாள் கூட தாமதமின்றி, தண்டனை பெற்றுக் கொடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.தைரியமாக புகார் கொடுப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், ரகசியப் பிரிவு ஒன்று, மாநில அளவில் உருவாக்கப்படும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
ரியாஸ்தீனுக்கு பாராட்டு
ஸ்டாலினின் மற்றொரு அறிக்கை:அறிவியல் உலகம் வியந்திடும் வகையில், தஞ்சாவூர் மாணவர் ரியாஸ்தீன், உலகிலேயே எடை குறைந்த செயற்கைக்கோளை வடிவமைத்து உள்ளார். அவற்றை, 2021ல் நாசா விண்ணில் ஏவுவது இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமிதம் தரும் சாதனை; வாழ்த்துகள். உறுதுணையாக இருந்த பெற்றோர், ஆசிரியருக்கும் பாராட்டுக்கள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
ஐ.ஆர்.எஸ்., அதிகாரி தி.மு.க.,வில் ஐக்கியம்
திருநெல்வேலி மாவட்டம், கீழ உவரியைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற வருமான வரித்துறை தலைமை கமிஷனர் வி.மகாலிங்கம், சென்னை அறிவாலயத்தில், ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில், தணிக்கை குழு உறுப்பினர் அப்பாவு, தேர்தல் பணிக்குழு செயலர் கம்பம் செல்வேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE