'மனித நேயமே உலகிலே சதா முகிழவே வருகவே, மருளே இருளே அறவே அகல' இது ஏதோ அருள்வாக்கு இல்லை! இதுதான், சங்கீத கலாநிதி சுதா ரகுநாதன், சென்னை சபாக்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கச்சேரியில் பாடிய பல்லவி. இதை, இவர் ராகம், தானம், பல்லவி எனும், ஆர்டிபி பகுதியில், மிகுந்த சமூகப் பொறுப்புணர்வுடன், சொல்லிலும், பொருளிலும் சிறந்த வரியொன்றை வழங்கியதை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பொதுவாக, பல்லவி என்பது ஏற்கனவே உள்ள ஒரு பாடலின் ஒரு வரியையோ அல்லது எதோ ஒரு தெய்வத்தைக் குறித்தோ இருந்துவிடும். நம்மை பிடித்திருக்கும், 'கோவிட் -19' தொற்று இன்னும் முழுமையாக நீங்காத தருணத்தில், இதுபோன்ற ஒரு பல்லவி, ஒரு பாசிடிவான எண்ணத்தை நமக்குள் எழச்செய்யும்.இந்த பல்லவி அமைந்தது ஆபோகியில், மிஸ்ர ஜாதி திருபுடையில், கிரகபேதம் சம்பவித்து,வலஜிக்கு ஒரு திட்டமிட்ட பயணிப்பு!கச்சேரியை சுதா ஆரம்பித்தது, பேராசிரியர் டி.ஆர்.சுப்பிரமணியத்தின் ஹமீர்கல்யாணி வர்ணத்துடன்.
இதைதொடர்ந்து வந்த விருத்தம், பாரதியாரின் விநாயகர் நான்மணி மாலையிலிருக்கும், 'எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன்' என்பது. இதை, வா வா வாரணமுகனே என்ற சுவர்ண வெங்கடேச தீக் ஷிதரின் கம்பீரநாட்டைப் பாடலுடன் இணைத்துக் கொண்டார். அழகாக ஒரு சிட்டை ஸ்வரம் இங்கே...தியாகராஜரின் அனுபமகுணாம்புதீ என்ற அடாணா பாடலை அடுத்துக் கொடுத்து, அதில் சரணத்தில் வரும் கஜராஜரக் ஷக எனுமிடத்தில், சுகப்பெருக்காக கற்பனை ஸ்வரங்களை வழங்கினார். இங்கு வயலின் பக்க வாத்தியமாக இருந்த விட்டல் ரங்கன், தன் இளவயதில், தான் எத்தகைய அபார ஆற்றல் பெற்றுள்ளார் என்பதை நிரூபிக்க, இதை ஒரு வாய்ப்பாகக் கருதி பயன்படுத்திக் கொண்டார்.
52வது மேளகர்த்தா ராகமாகிய ராமப்ரியாவில், 'கோரினவரமொஸகுமய்ய' என்ற பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் பெயரைப் பறைசாற்றும் பாடலைத் தேர்வுசெய்திருந்தார் சுதா. இதற்கான ராக வர்ணனையின் போது, சுதாவின் தொடர்ந்து கொண்டிருக்கும் இசை வேட்கையும், ராகத்தின் அழகுஸ்வரூபத்தை, ரசிகர்களுக்கு எடுத்துச் செல்வதில், தன் முழுமுனைப்பும் வெளிவந்தது. வழக்கம் போல, மேல்ஸ்தாயியில் சிறகு கட்டிக் கொண்டு பறக்கும் சங்கதிகள், குரலின் வளத்தைப் பதியச் செய்யும் பிருகாக்கள், புன்முறுவலுடன் சேர்ந்து வரும் ஜாரூக்கள், இவையெல்லாமே ஒன்றன் பின் ஒன்றாக...
கற்பனை ஸ்வரங்கள், 'கரிராஜ வரத வெங்கடேச' எனுமிடத்தில்.வயலினில் விட்டல் ரங்கன், தனக்குக் கற்பனையில் உதயமாகும் பிரமிக்கத்தக்க, நம்மைப் பிடித்தாட் கொள்ளும் பிடிகளை, ஆலாபனையில் கொடுத்தார். அகமகிழ்ந்தோம்!லயப்பிரியர்கள், மிருதங்கத்தில் பத்ரி சதீஷ்குமார், மோர்சிங்கில் ராமன், பல்லவியின் தாளப்போக்கை புரிந்து வாசித்து, தனியின் போது அவரவர்களது வாத்தியங்களுக்கான தனித்திறமைகள் வெளிப்படும்படி வாசித்துச் சிறப்பளித்தனர்.-எஸ். சிவகுமார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE