தீய சக்திகள் மட்டுமே, இந்த சமுதாயத்தில் நிகழும் கொடுமைகளுக்கு காரணமில்லை; நல்லவர்கள்அதை பார்த்து கொண்டு சும்மாஇருப்பதும் தான் காரணம். இந்த சமுதாயத்தில் வாழும் மக்கள் அனைவருமே, தங்கள் தலையில், குரூர எண்ணங்களைச் சுமந்து திரியும் சமூக விரோதிகள் இல்லை.
ஆல்பிரட் பேரெட்டோ என்றஇத்தாலிய சமூக இயல் நிபுணர் குறிப்பிட்டது போல், 20 சதவீத
தீயவர்கள் தான் இந்த சமுதாயத்தில் நடக்கும், 80 சதவீத தீய நிகழ்வுகளுக்கு காரணம். 20 சதவீத நல்லவர்கள் தான், சமுதாயத்தில் நடைபெறும், 80 சதவீத நல்ல செயல்பாடுகளுக்கு காரணம்.
இவர்களில், மவுனப் பெரும்பான்மையினர் எனப்படுபவர்களுக்கு நியாயமாக சிந்திக்கத்
தெரியும்; நல்லதுஎது, கெட்டது எது என்ற உண்மையும் புரியும். ஆனால், இவர்களிடம் உள்ள ஒரே குறை, வாய் திறந்துதங்களின் கருத்துகளை, ஆலோசனைகளை வெளியிடத் தயங்குவர்.
நாமும் இந்த சமுதாயத்தின் ஒரு அங்கம்; நமக்கும் இந்த சமுதாயப் பொறுப்பு உள்ளது என்பது இவர்களுக்கு தெரிவதில்லை. தாங்களே நேரடியாக, தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படும் போது தான், அந்த உறக்கத்தில் இருந்து இவர்கள் விழிக்கின்றனர். உண்மையில், சமூக நலனில்
அக்கறையுடன், ஓசையின்றி செயல்பட்டு நல்ல காரியங்களைச் செய்துவரும், 20 சதவீதத்தினர், மற்ற, 80 சதவீதத்தினர் பற்றி பொருட்படுத்துவதில்லை என்றாலும், 20 சதவீத
தீயவர்களின் தாக்கத்தை, அவர்கள் சமாளிக்க வேண்டியிருப்பது உண்மை தான்.
இதே நிலை தான், அரசு இயந்திரமாக செயல்பட்டு வரும் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் நிலவுகிறது. 20 சதவீதஊழல் அதிகாரிகளுடன், 80 சதவீத மவுனப்
பெரும்பான்மையும் சேர்ந்து செயல்படத் துவங்கி விட்டது. 20சதவீத நல்ல அதிகாரிகளின்
நேர்மையும், அவர்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள மதிப்பும் அவர்களைக் கவரவில்லை.
குறுக்கீடு தடுத்து விடுகிறது
இருபது சதவீத ஊழல் அதிகாரிகளின் வசதியான வாழ்க்கை தான், அவர்களின் கண்ணுக்கு தெரிகிறது.எனவே, அந்த, 60 சதவீதத்தை, நல்ல அதிகாரிகள் பக்கம் திருப்பினாலே, மக்களுக்கு வெற்றி தான். அதற்கு மக்களின் மவுன பெரும்பான்மையின், மவுனம் கலைய வேண்டும்.
அதிகாரிகளில் தங்கள் பதவிக்குரிய மதிப்பையும், மரியாதையையும் மட்டுமே அனுபவித்து, அதிகார போதையில் இருக்கும் அதிகாரிகளுக்கு, மக்களிடம் நெருங்கிப்போக மனமில்லை.
மக்களிடம் நெருங்கிப்போய் தங்கள் கடமையைச் செய்து நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற
எண்ணமிருக்கும் பல அதிகாரிகளுக்கு, அதை எப்படி செய்ய வேண்டுமென்று தெரியவில்லை.
அந்த எண்ணமும் இருந்து, வழியும் தெரிந்து செயல்படுபவர்களுக்கு பொதுமக்களிடமிருந்து அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையும், புகழையும் விரும்பாத, பொறாமை குணம் கொண்ட உயர் மற்றும் சக அதிகாரிகளின் குறுக்கீடு தடுத்து விடுகிறது.இவை அனைத்தையும்
முறியடித்து, அரசு அதிகாரிகளைத் தங்கள் பக்கம் திருப்பும் மாபெரும் சக்தி மக்களிடம்
இருக்கிறது. அதற்கு முதல் படியாக நலம் நாடும் நல்லவர்களின்மவுனம் கலைய வேண்டும்.
இந்த சமுதாயத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் அதிகாரவர்க்கம், அரசு அதிகாரிகள்,
ஆட்சியாளர்கள், சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள், நீதியை நிலைநாட்டும் நீதிபதிகள், நாட்டின் நடப்பை அம்பலப்படுத்தும் ஊடகங்கள் அனைத்துமே தெருவில் வந்து கூச்சல் போடும், குரல் கொடுக்கும் ஒருசாராருக்குத் தான் செவி சாய்க்கின்றன.
எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு, தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக
கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் அப்பாவி குடிமக்களின்பால் இவர்களின்கவனம் செல்வதே இல்லை,கவனத்துக்கு வந்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.இவர்கள், யாருமே அணுகமுடியாத தீவுகளிலா இருக்கின்றனர்; இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அரசு
இயந்திரத்தின் அங்கங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன; இவர்கள்அனைவரும்,
அரசியல்வாதிகள் அரியணைக்கு செல்ல உதவியபடிக்கட்டுகள் தானே...
தேவைக்கு அதிகமாக சொத்துக்களை குவித்து வைத்து, நீதிமன்றத்தில் ஊழல்
வழக்குகளுக்காகமுன்ஜாமின் வாங்குவதற்காக, சிலஅரசியல் பிரபலங்கள் அலைந்துகொண்டிருக்கின்றனர். மிக உயர்ந்த வழக்கறிஞரை நியமிக்க, சம்பாதித்ததில் ஒரு பகுதியைக் கொட்டிக்கொடுக்கின்றனர்.அவர்களுக்கு மனசாட்சி இருந்தால், சொத்துக்களை குவிப்பதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட நேரத்தில் ஒருசிறு பகுதியை இவர்களுக்காகசெலவிட்டிருந்தால் கூட, இவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்குமே!இது கூடவா உங்களது சிந்தனைக்கு
எட்டவில்லை?
ஊடகங்கள் மூலமாக பிரபலப்படுத்தப்படும் விஷயங்களில் மட்டும் உங்களின் ஒருமித்த
கவனத்தைதிருப்புகிறீர்களே; உங்களிடம் வரும் ஒவ்வொரு வழக்கிலும், ஒரு அப்பாவி
ஏழையின் கண்ணீர் கதை மறைந்து இருக்கிறது. ஒரு ஊழல் அதிகாரியால்
அது உங்களின் கவனத்திலிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது. இங்கு யாருக்கும் வெட்கமில்லை
பாரம்பரியமிக்க வழக்கறிஞர் தொழிலில் தவறாக புகுந்துள்ள ஒரு சிலர் அதற்கு சுயலாபத்துக்காக துணைபோகின்றனர்.
ஒரு அப்பாவிக்கு, 14 ஆண்டுகள் கழித்து நியாயம் கிடைத்தது என்பது போற்றிப் பாராட்டப்பட வேண்டிய விஷயமல்ல; வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்.ஒரு நடிகர், 'டிவி'யில்
சுயலாபத்துக்காகவும், சுயவிளம்பரத்துக்காகவும்திட்டமிட்டு அரங்கேற்றிக்கொண்டிருக்கும் போலியான ஒரு நிகழ்ச்சிக்கு கொடுக்கப்படும்கவனம் கூட, உண்மையில் நிகழ்ந்து
கொண்டிருக்கும் அவலங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை.இதில், இங்கு யாருக்கும் வெட்கமில்லை.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு, நீதிமன்றத்தில் வழக்குகள் தோல்வியடைவதற்கான காரணத்தை விவரித்து, ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். அந்த நாளிதழின் பொறுப்பாளர் ஒருவர், 'நீங்கள் எழுதியிருப்பது எல்லாம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம்; புதிதாக ஏதாவது சொன்னால்
நன்றாக இருக்கும்' என்றார்.நிகழ்ந்து கொண்டிருக்கும்உண்மையான அவலத்தை,
சமுதாயத்தை பாதிக்கும் ஒரு விஷயத்தைதிரும்பத் திரும்ப நினைவூட்டி,சம்பந்தப்பட்டவர்களின் உறக்கத்தைக் கலைப்பதில் அவருக்கு அக்கறை இல்லை; அவர் பத்திரிகைக்கு புதுமை வேண்டுமாம்.
ஆனால், அந்த பத்திரிக்கையில் ஒரு திரைப்பட நடிகை மூன்றாவது முறையாக, ஒரு கட்சிக்குத் தாவியிருந்ததை மிக அக்கறையோடு வெவ்வேறு கோணத்தில் வெவ்வேறு சிந்தனை சிற்பிகள் அலசி ஆராய்ந்து தெரிவித்த, 'மக்களுக்கு மிக மிக தேவையா'ன அந்த புதிய செய்தியை அக்கறையோடு வெளியிட்டிருந்தனர்.அதுவும் ஒரு செய்தி தான்என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதற்கு கொடுக்கப்பட்டிருந்த முக்கியத்துவம், ஒரு சமுதாய சீரழிவை சுட்டிக்காட்டுவதற்கு கொடுக்கப்படவில்லையே என்பது தான் வேதனைக்குரிய விஷயம்.
தரம் மிக்க அந்த பத்திரிகையின் தரம் தாழ்ந்து போயிருந்ததைக் குறிப்பிட்டு, அதன்
ஆசிரியருக்கு ஒருகடிதம் எழுதி என் ஆதங்கத்தைத்தீர்த்துக்கொண்டேன்.இவை
எல்லாவற்றுக்குமான தீர்வு ஒன்று தான். நல்லவர்களின் மவுனம் கலையவேண்டும்.
குரலெழுப்பி, குழப்பம் விளைவித்துக்கொண்டிருக்கும், குறைந்த எண்ணிக்கையினரின்
அர்த்தமற்ற கூச்சல் அதில் மரணிக்க வேண்டும்.
எத்தனையோ வாழ்வாதாரபிரச்னைகளில் நாடு சிக்கித்திணறிக் கொண்டிருக்கும்போது, பல
அப்பாவிகள், அராஜகக் கும்பலாலும், திறமையும், நேர்மையும் அற்றஅதிகார வர்க்கத்தாலும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, ஏதோ ஒருஇயக்கத்தின் தலைவர், யாருமே கண்டுகொள்ளாத ஒரு விஷயத்தை, எங்கோ ஒரு மூலையில் ஏதோ பேசவேண்டுமென்று பேசிவிட்ட ஒரு செய்தியை அதை அப்படியே விட்டிருந்தால் யாருடையகவனத்தையும் அது
ஈர்த்திருக்காது.
முழுவதும் தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்காகவே அந்த செய்தியை பிரபலப்படுத்தி, நாடு முழுவதும் மூலைக்கு மூலை கொடி பிடிப்பதும், ஆர்ப்பாட்டம் செய்துமக்களின் அன்றாட வாழ்க்கையையும், அரசு இயந்திரத்தின் செயல்பாட்டையும் பாதிக்கச்செய்வதும் எந்த விதத்தில் நியாயம்?மனோபலம் ஒன்றே போதும்நல்லவர்களே விழித்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாலைக்கு வந்து மறியல் செய்ய வேண்டாம். குரல் எழுப்பி ஒரு நாடகத்தை அரங்கேற்ற வேண்டாம். உங்கள் பகுதியில் நடக்கும் அராஜகத்தை நேர்மையான அதிகாரியின், நீதிமன்றத்தின் கவனத்துக்குகொண்டு செல்ல உதவுங்கள்.
உங்கள் வசிப்பிடப் பகுதியை அராஜகமும் குற்றமும் நிகழாத பகுதியாக மாற்ற, அந்த பகுதி
பொறுப்பு அதிகாரிகளின் ஒத்துழைப்பை வேண்டிப் பெறுங்கள். மறுத்தால், உயர் அதிகாரிகளின், ஆட்சியாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள். நீதிமன்றத்தை அணுக உதவுங்கள். இவை எதற்கும் ஆரவாரமும், நாடக அரங்கேற்றமும் தேவையில்லை. அமைதியாக செயல்படுங்கள். நல்லோரின் மவுனம் நலம் பயக்காது. உங்களின் ஒற்றுமை கைகோர்ப்பு, அமைதியான அணுகுமுறை அவர்களின் மனதை நிச்சயமாக மாற்றும். எல்லா அதிகாரிகளும் நேர்மையற்றவர்கள், திறமையற்றவர்கள் இல்லை.
திறமையற்றவர்களையும், நேர்மையற்றவர்களையும் கூட உங்களின் ஒற்றுமையான
செயல்பாடும், நியாயமான அணுகுமுறையும் நிச்சயமாக மாற்றும். இதற்கு எந்த கட்சியும், கொடியும் தேவையில்லை; மனோபலம் ஒன்றே போதும்.உங்கள் தெருவில் உள்ள, இரண்டு அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள் தங்கள்வீட்டு வேலி பிரச்னைக்காகஉயர் நீதிமன்றத்துக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் போக விடுவதுஉங்களுக்கு தான் கேவலம்.அந்த தெருவில்
நடுநிலையானவர்களே இல்லையா; அமர்ந்துபேசுங்கள். பாரபட்சமற்ற பேச்சுஅவர்களைப்
பணியவைக்கும்!
- மா.கருணாநிதி
காவல் துறை கண்காணிப்பாளர், ஓய்வு
தொடர்புக்கு:இ - மெயில்:
spkaruna@gmail.com
மொபைல்: 98404 88111
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE