சென்னை : கொரோனா தளர்வுக்கு பின், 21 நாட்களில், ஒன்பது, 'மெமூ' ரயில்களுக்கான, 72 நவீன பெட்டிகள் தயாரித்து, ஐ.சி.எப்., சாதனை படைத்துள்ளது.
சென்னையில், ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான ஐ.சி.எப்., கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின், ரயில் பெட்டிகளை தயாரித்து வருகிறது. இம்மாதம், பராமரிப்பு பணி மற்றும் விடுமுறை நாட்கள் தவிர, 21 நாட்கள் மட்டுமே, பெட்டி தயாரிப்பு பணிகள் நடந்தன. இதில், 'மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட்' எனும், 'மெமூ' ரயில் பெட்டிகள் தயாரிப்பு துரிதமாக நடந்துள்ளது. இதில், ஒன்பது ரயில்களுக்கான, 72 பெட்டிகள் தயாரித்து, ஐ.சி.எப்., சாதனை படைத்துள்ளது.
இத்துடன், ராஜஸ்தான் மாநில சுற்றுலாத் துறைக்கு, புதிய வடிவமைப்புடன் கூடிய, 'விஸ்டம்' என்ற. சுற்றுலா பயணியருக்கான ரயில் பெட்டியும், மஹாராஷ்டிரா மாநிலம், லாட்டூரில் உள்ள ரயில்பெட்டி தொழிற்சாலையுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.சுற்றுலா இடங்களில், வெளிப்புற காட்சிகளை எல்லா திசையிலும் பார்க்க ஏதுவாக, பெட்டியின் மேற்கூரை முழுதும், நவீன கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்பெட்டியில், 44 பேர் பயணம் செய்யலாம். இத்துடன், ஐ.சி.எப்., உற்பத்தி மேம்பாட்டுக்கு பெரிதும் உதவியாக இருந்ததற்காக, 'வெல்டிங்' பிரிவுக்கு தரச்சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன், ஐ.சி.எப்., தரக்கட்டுப்பாடு மேலாண்மைக்காக, 'ஐ.எஸ்.ஓ., 9,000, ஐ.எஸ்.ஓ., 14,000' என்ற தரச்சான்றுகளும் பெற்றுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE