சென்னை: அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா குறித்து புகார் அளித்தவர்கள், நேரில் ஆஜராகி ஆவணங்கள் தாக்கல் செய்யும்படி, விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
அண்ணா பல்கலை துணைவேந்தராக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, பேராசிரியர் சுரப்பா பணியாற்றுகிறார். அவரது நிர்வாகத்திற்கு, பல்கலை பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.சுரப்பாவின் நிர்வாக சீர்திருத்த முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், அவருக்கு எதிராக, தமிழக உயர் கல்வி துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர் அமைப்புகள், சுரப்பாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியுள்ளன.இந்நிலையில், சில புகார் கடிதங்கள் அடிப்படையில், சுரப்பாவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், விசாரணை ஆணையத்தை, தமிழக அரசு நியமித்துள்ளது.இந்த ஆணையம், துணைவேந்தருக்கு எதிரான புகார்கள் தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடமும், விசாரணை நடத்தி வருகிறது. அண்ணா பல்கலையின் பதிவாளர் கருணாமூர்த்தி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் மற்றும் பலரிடம் விசாரணை நடந்துள்ளது.
தொடர்ந்து, துணைவேந்தர் சுரப்பாவுக்கு எதிராக புகார் அளித்தவர்களிடம், விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழக தனியார் கல்லுாரிகள் மற்றும் பணியாளர் சங்க நிர்வாகிகள், உரிய ஆவணங்களுடன், வரும், 6ம் தேதி விசாரணைக்கு, ஆணையத்தில் ஆஜராகும்படி, ஆணைய உறுப்பினர் செயலர் சங்கீதா சம்மன் அனுப்பி உள்ளார்.படிப்படியாக ஒவ்வொரு புகார்தாரருக்கும் சம்மன் அனுப்பப்படுவதாக, உயர்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE