சென்னை: 'டாஸ்மாக்' கடைகளில், மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதை தடுப்பதோடு, துாய்மை பணி சரியாக நடக்கிறதா என, தீவிரமாக கண்காணிக்குமாறு, மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், 5,330 கடைகள் வாயிலாக, தினமும், 100 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகளை விற்பனை செய்கிறது. இது, ஆங்கில புத்தாண்டு, தீபாவளி உள்ளிட்ட விசேஷ நாட்களில் அதிகரிக்கிறது.ஊரடங்கால், தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், நடப்பாண்டு தீபாவளி மற்றும் தீபாவளிக்கு முந்தைய நாள் என, இரு நாட்களில் மட்டும், 465 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகின.மது கடைகளில், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, 'மது வாங்க வரும், 'குடி'மகன்கள் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். 'கடைகளில், அடிக்கடி துாய்மை பணி மேற்கொள்ள வேண்டும்' என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.
அவற்றை ஊழியர்கள் பின்பற்றவில்லை.ஆங்கில புத்தாண்டு மது விற்பனைக்கு, சில தினங்களே உள்ளன. ஊழியர்கள், அரசு நிர்ணயம் செய்துள்ளதை விட, கூடுதல் விலை வசூலிப்பதால், 'குடி'மகன்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், முறைகேட்டை தடுக்க, கடைகளில் தீவிர ஆய்வு மேற்கொள்ளுமாறு, மாவட்ட மேலாளர்களுக்கு, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE