திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், தெரு விளக்குகள் எரியாததால், இருள் சூழ்ந்துள்ளது.திருப்பூர் நகரில் உள்ள தெருவிளக்குகளில், 28 ஆயிரம் விளக்குகள், தனியார் பராமரிப்பிலும், எஞ்சியுள்ள, 3,000 விளக்குகள் மாநகராட்சி பராமரிப்பிலும் உள்ளன. தற்போது, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 3,263 எல்.இ.டி. விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.மாநகராட்சி எல்லைக்குள், அவிநாசி ரோடு, பி.என்.ரோடு, ஊத்துக்குளி ரோடு, மங்கலம் ரோடு, பல்லடம் ரோடு, காங்கயம் ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய பிரதான ரோடுகளில், சென்டர்மீடியனுக்கு இணையாக, தெருவிளக்கு கம்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. முக்கிய சாலை சந்திப்புகளில், உயர் கோபுர மின் விளக்குகள் உள்ளன.அதில், புஷ்பா சந்திப்பில் இருந்து குமார்நகர் வரை, நீண்ட துாரத்துக்கு தெரு விளக்கு ஒளிராமல் உள்ளது. அங்குள்ள கடைகளின் முகப்பில் உள்ள விளக்கு வெளிச்சத்தில், மக்கள் நடமாடி வந்தனர். கடைகள் மூடப்படும் நிலையில், இருள் சூழ்கிறது. இதனால், வாகன ஓட்டிகள், பஸ்சுக்காக காத்திருப்போர் அச்சமடைகின்றனர். திருடர்கள் அச்சுறுத்தலும் உள்ளது. எனவே, 'மின்விளக்கு பராமரிப்பு பணியை உடனடியாக மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE