கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி- உளுந்துார்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலை இருவழிச்சாலைகளாக உள்ள புறவழிச்சாலைகளை அகலப்படுத்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை-சேலம் வரையிலான, 136 கி.மீ., சாலை, கடந்த 2012 ம் ஆண்டு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. இதில் மாடூர், நத்தக்கரை, மேட்டுபட்டி ஆகிய இடங்களில் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.சேலம், கோவை, திருப்பூர் போன்ற பெரு நகரங்களை இணைக்கும் சாலை என்பதால், இச்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.
உளுந்துார்பேட்டை-சேலம் சாலையில் போக்குவரத்து குறைவை காரணம் காட்டி உளுந்துார்பேட்டை, எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்தூர், வாழப்பாடி, உடையாப்பட்டி ஆகிய எட்டு இடங்களில் உள்ள புறவழிச்சாலைகள் இருவழிச்சாலையாகவே இருந்து வருகிறது. இதனால் இப்பகுதிகளில் கடந்தாண்டுகளில் 200க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டு, 100க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
வெகு தொலைவிலிருந்து நான்கு வழிச்சாலை அமைப்பினை கருத்தில் கொண்டு அதிவேகத்தில் வரும் வாகன ஓட்டிகள் திடீரென அகலம் குறைந்த புறவழிச் சாலையிலும் செல்ல நேர்கையில், திடீரென எதிரெதிரே வரும் வாகனங்களால், குழப்பமடைந்து நிலைதடுமாறி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றனர். இந்த சாலைப்பகுதிகளில் வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச்செல்ல முற்படும் போதும் விபத்துகள் கட்டாயமாக ஏற்பட்டு வருகிறது.
இருவழிச்சாலையாக உள்ள புறவழிச்சாலைகளில் மட்டுமே அதிகளவில் விபத்துகள் நடப்பதால், அதனை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்படுகிறது. ஆனால், நகாய் அமைப்பினர் அதனை சற்றும் சட்டை செய்யாமல் பாராமுகமாகவே இருந்து வருகின்றனர்.
இந்த சாலையில் பணத்தை மட்டுமே வசூல் செய்வதை குறிக்கோளாக கொண்டுள்ள டோல்கேட் நிர்வாகமும், மனித உயிர்கள் பலியாகி வருவதை தடுப்பதற்கு, சாலைகளில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது பொதுமக்களை கடும் அதிருப்தியடைய செய்கிறது.புறவழிச் சாலைகள் நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறி ஓராண்டு நிறைவடைந்துவிட்டது.
எனவே மனித உயிர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, புறவழிச் சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க மத்திய, மாநில அரசு உடனடி நடவடிக்கையாக இந்த சாலை முழுமைக்கும் நான்கு வழிச்சாலையாக மாற்றிடும் பணிகளை துவக்கிட வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE