கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டத்தை கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளதால், ஏழை, எளியோர் அரசின் உதவிக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெ., முதல்வராக இருந்தபோது, பெண்கள் திருமணம் செய்து கொள்ள பெற்றோர்கள் படும் கஷ்டங்களை உணர்ந்து அவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டும், பெண்கள் பட்ட படிப்பு படிக்க துாண்டும் வகையில், மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவி திட்டத்தை கொண்டு வந்தார்.
இது தவிர டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமணம், மணியம்மையார் விதவை மகள் திட்டம், டாக்டர் தர்மாம்பால் விதவை மறுமணம் மற்றும் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் போன்ற திருமண நிதி உதவி திட்டம், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திர திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.
அதில் மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம் சிறப்பு வாய்ந்தது. இத்திட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெற்றோர்களுக்கு 1 பவுன் தங்க நாணயம், திருமணமாகும் பெண்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ. 25 ஆயிரம், பட்ட படிப்பு முடித்திருந்தால் ரூ. 50 ஆயிரம் அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
இத்திட்டம் மூலம் உதவித் தொகை மறைந்த முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருந்த வரை உடனுக்குடன் வழங்கப்பட்டது. அவரது மறைவுக்கு பிறகு இத்திட்டம் செயல்படுத்துவதில் அரசு சுணக்கம் காட்டி வருகிறது.கடந்த 2017ம் ஆண்டு வரை வந்த விண்ணப்பங்களுக்கு மட்டுமே அரசு உதவி தொகை வழங்கியுள்ளது. அதன் பிறகு வழங்காததால், மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் திருமண உதவி தொகை கேட்டு குவிந்துள்ளன.
மாவட்டத்தின் பல பகுதிகளில் பெற்றோர்கள் அரசு வழங்கும் திருமண உதவி திட்டத்தை நம்பி கடன் வாங்கி திருமணம் செய்து வைத்துவிட்டு அரசு உதவி தொகைக்காக காத்திருக்கின்றனர். அரசு இலவச சைக்கிள், லேப்டாப் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. ஆனால் திருமண உதவித்திட்டத்தை மட்டும் கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் கிடப்பில் உள்ள ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்தை துரிதமாக செயல்படுத்த வேண்டும் என பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE