''ஆளுங்கட்சிக்கும், கவர்னருக்கும் இடையில் உரசல் அதிகமாகுதாம் பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.
''என்ன காரணமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''அண்ணா பல்கலை துணைவேந்தர் மீதான ஊழல் புகாரை விசாரிக்க, அரசு தரப்புல, விசாரணை கமிஷன் அமைச்சாங்க... இது குறித்து, கவர்னரிடம் ஆலோசிக்காததால், அவர் அதிருப்தியில இருந்தார் பா...
''இந்நிலையில அமைச்சர்கள் மீது, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ஊழல் புகார் மனு தயார் செஞ்சு, கவர்னரிடம் கொடுத்து, நடவடிக்கை எடுக்கணுமுன்னு கோரிக்கை விடுத்தாரு பா...
''இந்த மனு குறித்து, கவர்னர் பரிசீலித்து வருவது, ஆளும் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்காம் பா...''கவர்னர் கீழ் உள்ள, பல்கலை துணைவேந்தர்கள், ஆளுங்கட்சி சொல்லுறதை கேட்குறது
இல்லையாம் பா...''சமீபத்தில், திருவள்ளுவர் பல்கலையில் பதிவாளரை தேர்வு செய்ய, நேர்முகத் தேர்வு நடத்த முடிவு பண்ணினாங்க... அதுக்கு ஆளுங்கட்சி தரப்புல ரெண்டு பேரை, பரிந்துரை செஞ்சிருக்காங்க பா...
''அந்த ரெண்டு பேருக்கும் உரிய தகுதி இல்லைன்னு, துணைவேந்தர் நிராகரிச்சுட்டாராம் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''முதல்வரை தனியே சந்திச்ச அமைச்சர், சூடான பால் போல பொங்கிட்டாராம் ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.
''என்னன்னு விளக்கமா சொல்லும்...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''ஆவின் நிறுவனத்துல, 430க்கும் மேற்பட்ட பணியிடங்கள நிரப்ப போறாங்களாம்... இது தொடர்பாக, தன்னிடம் சரியான தகவல் தெரிவிக்காத, நிர்வாக மேலதிகாரியை இடம் மாற்றணுமுன்னு, அமைச்சர் முடிவு பண்ணியிருக்கார் ஓய்...
''பலமுறை முயற்சி பண்ணியும், அமைச்சரை மீறிய, 'அதிகாரிகளின் வட்ட அரசியலால்' அவரை, 'டிரான்ஸ்பர்' செய்ய முடியலையாம் ஓய்...
''பொறுத்து பொறுத்து பார்த்த அமைச்சர், முதல்வரை நேரடியாக சந்திச்சு இருக்காரு... 'என் துறையில இருக்குற ஒரு அதிகாரியை கூட, என்னால் மாத்த முடியலையே...' என, பொங்கியிருக்கார் ஓய்...''இதையடுத்து தான், அந்த அதிகாரியை, இடமாற்றம் பண்ணி இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''ஏலகிரி மலையில எதிரெதிர் கட்சி தலைவர்கள் கும்மாளம் போடுறாவ வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.
''என்னங்க சொல்லுறீங்க...'' என, ஆர்வத்துடன் கேட்டார், அந்தோணிசாமி.
''திருப்பத்துார் மாவட்டம், ஏலகிரி மலையில், எதிர்க்கட்சியின் முன்னணி தலைவருக்கு சொந்தமான சொகுசு பங்களா இருக்கு... அதே ஊருல, அமைச்சர் ஒருவர், ஆடம்பர ஓட்டல் ஒண்ணு ஆரம்பிச்சிருக்கார் வே...
''எதிரெதிர் கட்சியைச் சேர்ந்த இருவரும், ஒரே ஜாதி என்பதால், அடிக்கடி போனில் பேசிக்குவாவ... சமீபகாலமாக, இரவு நேரத்தில் சந்திக்கும் இருவரும், கும்மாளம் போட்டபடி, அரசியல் பேசிக்கிறாவ வே...
''அவர்கள் போட்டியிடும் தொகுதியில, எதிர்க்கட்சி சார்பாக, 'டம்மி' வேட்பாளர நிறுத்தணும்... யாரு ஆட்சிக்கு வந்தாலும், 'டெண்டர்' விஷயத்துல, 'அட்ஜஸ்ட்' பண்ணிக்கணுமுன்னு, ஒப்பந்தம் போட்டுருக்காவளாம் வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
சபரிமலைக்கு சென்று வந்த துரைமுருகனும், வீரமணியும், நண்பர்களுக்கு, 'சிப்ஸ்' கொடுத்தனர். அதை வாங்கியபடியே நண்பர்கள் நடையைக் கட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE