'அப்போ, கோர்ட்டில் சொல்லி விட வேண்டியது தானே; தமிழகத்தின் மிகப் பெரிய
மர்மம் விலகி விடுமே...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க.,
அவைத்தலைவர் மதுசூதனன் பேட்டி: தொகுதி பக்கமே வராத, அ.ம.மு.க., தலைவர்
தினகரன், 20 ரூபாய் நோட்டை கொடுத்து, என்னை தோற்கடித்தார். அவருக்கு,
ஜெயலலிதாவை பற்றி தெரியாது. ஆனால், அவரை யார் சாகடித்தனர் என, தெரியும்.
'தேர்தல் நேரத்தில், இதை, தமிழக அரசு செய்யுமா... நீங்கள் எதிர்பார்ப்பது வேஸ்ட்...' என, கூறத் தோன்றும் நிலையில், தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: தமிழக அரசு, பொங்கலுக்கு வழங்கும், 2,500 ரூபாயை, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும்.
'பா.ஜ.,வினர் போல, கம்யூ.,க்களால், 'பாலகிருஷ்ணனை அமைச்சராக்குவோம்' என, தைரியமாக சொல்ல முடியுமா... என, கேட்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பேராசிரியர் அருணன் அறிக்கை: 'எச்.ராஜாவை அமைச்சராக்குவோம்' என, பா.ஜ., துணைத் தலைவர் அண்ணாமலை கூறுகிறார். ஈ.வெ.ரா.,வையும், அண்ணாதுரையையும் தரக்குறைவாக விமர்சிக்கும் ராஜா, அமைச்சராவது தமிழகத்திற்கே தலைகுனிவு. ஆகவே, பா.ஜ., ஒரு தொகுதியிலும் வெற்றி பெறக் கூடாது என்று சபதம் ஏற்போம்.
'கூடவே, 'வன்முறை என்றால் என்னவென்றே எங்களுக்கு தெரியாது... எங்களைப் போய் இப்படி சொல்கிறதே...' என்றும் சொன்னால், 'பொருத்தமாக' இருக்குமே...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ம.க., தலைவர் மணி பேட்டி: தி.மு.க.,வில் உள்ள வன்னியர்கள், இட ஒதுக்கீடு போராட்டத்தில் கலந்து கொள்வது, தி.மு.க.,வுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பா.ம.க.,வை வன்முறை கட்சி என கூறுவது கண்டிக்கத்தக்கது. பா.ம.க., எந்த இடத்திலும் வன்முறையில் ஈடுபட்டதில்லை.
'அவசிய தேவை தான். ஆனால், சுனாமி நினைவுநாளில் இப்படி சொல்லி விட்டு, பிற நேரங்களில் மீனவர்களை மறந்து விடுகிறீர்களே...' என, கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: சுனாமி தாக்கிய மீனவர் பகுதியில், அவர்களுக்கான வீடு, சுகாதார வசதி, கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற, சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும். ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட, சுனாமி மறுவாழ்வு திட்டங்களின் நிலை குறித்து ஆராய்ந்து, குறைகளை களைய, காலத்திற்கேற்ற புதிய திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும்.
'முதலில் உங்கள் கட்சிக்கு, எத்தனை தொகுதிகளை, தி.மு.க., கொடுக்கும் என்பதை கவனியுங்கள்... அதற்கு பின், ஏற்ற, இறக்கமாக பேசலாம். இப்போதே பேசி விட்டால், குறைந்த எண்ணிக்கையில் தொகுதியை கொடுத்து ஒதுக்கி விட்டால், எதிர்த்து பேச கஷ்டமாக இருக்கும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய குழு உறுப்பினர் மகேந்திரன் பேட்டி: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, சிவப்பு கம்பளம் விரித்துள்ள மோடி அரசை எதிர்த்து, இளைஞர்கள் களத்தில் இறங்கி போராட வேண்டும். அ.தி.மு.க.,வின் முதுகில் ஏறி சவாரி செய்து கொண்டிருக்கும், பா.ஜ., பல கனவுகளோடு உள்ளது. அதையும், அதை சுமந்து கொண்டிருக்கும், அ.தி.மு.க.,வையும், தமிழக மக்கள், வரும் தேர்தலில் முறியடிப்பர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE