கோவை:சிங்காநல்லுாரில் சிதிலமடைந்த பழைய குடியிருப்புகளை இடித்து விட்டு, புதிய குடியிருப்புகள் கட்டுவது தொடர்பாக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அளித்துள்ள வரைவுத்திட்டத்தை, தற்போதைய வீட்டு உரிமையாளர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.
கோவை மாநகராட்சி, 64வது வார்டு சிங்காநல்லுார் உழவர் சந்தைக்கு அருகே, 17.55 ஏக்கரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் விற்பனை செய்த, 960 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன், வாரியத்தால் கட்டப்பட்ட இந்த வீடுகள், தற்போது சிதிலமடைந்து எப்போது விழுமோ என்ற நிலையில் உள்ளன.வீட்டு உரிமையாளர்கள், தொடர்ந்து நடத்திய பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து, தற்போதைய வீடுகளை இடித்து விட்டு, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான வரைவுத்திட்டத்தை, அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களிடம், வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் கரிகாலன் வழங்கினார்.
அந்த வரைவு திட்டம், குடியிருப்பு உரிமையாளர்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை. அதனால் அவர்கள் வரைவு திட்டத்தை ஏற்க மறுத்து விட்டனர். அத்துடன், வீட்டுவசதி வாரியத்திற்கு, சில நிபந்தனைகளை விதித்துள்ளனர்.அவற்றை நிறைவேற்றி, கட்டடம் கட்டுவதற்கான வரைவுத்திட்டத்தில் அவற்றை குறிப்பிட்டு சமர்ப்பித்தால் மட்டுமே ஏற்போம் என தெரிவித்துள்ளனர்.என்னென்ன நிபந்தனைகள் உழவர் சந்தையின் பின்புறம், 'ஏ- விங்' பகுதியில் மட்டும், புதிய பல அடுக்குமாடிகள் அமைய வேண்டும். துாண் தளம், கார் பார்க்கிங் வசதி அமைத்துக்கொடுப்பது அவசியம்.
கிரைய பத்திர செலவு முழுவதையும், வீட்டு வசதி வாரியமே ஏற்க வேண்டும். வீட்டு உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டபடி, 40 சதவீத சதுரடி சேர்த்து வழங்க வேண்டும்.இக்கோரிக்கைகளை ஏற்று, மறு வரைவு திட்டம் கடித எண்..2500/11. நாள்.18.12.2020ன் படி, மாற்றம் செய்து வழங்க வேண்டும்.இவ்வாறு, நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
இந்த நிபந்தனைகள் அடங்கிய அறிக்கையை, சிங்கை மாநகர் வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கம், சிங்கை நகர பாரதி வீட்டு உரிமையாளர் நலச்சங்கம், மறுகட்டமைப்பு 'டி விங்' வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கம் என, அனைத்து வீட்டு உரிமையாளர்களும், வாரியத்தின் நிர்வாக பொறியாளர் கரிகாலனிடம் சமர்ப்பித்துள்ளனர்.சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'இக்கோரிக்கைகளை ஏற்காத பட்சத்தில், அடுத்த கட்ட போராட்டத்தில் இறங்குவது குறித்து, அனைத்து சங்கத்தினரும் சேர்ந்து முடிவெடுப்போம்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE