உடுமலை:நிலத்தடி நீரில், உவர்ப்புத்தன்மை தொடர்ந்து அதிகரித்து வரும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தி, பல ஆயிரம் ஏக்கர் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், நிலத்தடி நீர் உவர்ப்பாகவும், வேதித்தன்மை மிகுந்ததாகவும் உள்ளது.
இப்பகுதிகளில், அமைக்கப்பட்டுள்ள கிணறு மற்றும் போர்வெல்களிலிருந்து, பெறப்படும் தண்ணீரை, நிலத்தில் தொடர்ந்து பாய்ச்சும் போது, வெள்ளை நிறத்தில், உப்பு போன்ற படிமம் விளைநிலத்தில் படிகிறது. காய்கறி பயிர்கள் முளைவிடுவதில் பாதிப்பு தொடர்கதையாக உள்ளது.உப்பு நீரை பயன்படுத்தி, தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், சொட்டு நீர் பாசன முறையை பின்பற்றுகின்றனர். இருப்பினும், மரங்களை சுற்றி அமைக்கப்படும் வட்டப்பாத்தியில், உப்பு படிமம் படிகிறது.சொட்டு நீர் மற்றும் பிரதானக்குழாய்களில், உப்பு அடைத்துக்கொண்டு சீராக தண்ணீர் செல்வதில்லை.
இதனால், தென்னை மரங்களில் இலைக்கருகல் உட்பட பல்வேறு நோய்த்தாக்குதல்கள் நிரந்தரமாகியுள்ளது.இப்பகுதியில், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில், நிலத்தடி நீரின் தன்மையை மாற்றுவதற்கான, தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் செயல்படுத்துவதில்லை. இதனால், பல கிராமங்களில், பல ஆயிரம் ஏக்கரில், விவசாயம் கேள்விக்குறியாக மாறி வருகிறது.எனவே, வேளாண் பல்கலை., யிடம், வழிகாட்டுதல்கள் பெற்று, கிராமங்களில் சிறப்புத்திட்டங்களை, செயல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE