பொள்ளாச்சி:''பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்,'' என, சப்-கலெக்டர் தெரிவித்தார்.பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பழங்குடியின மக்களுக்கான, வன உரிமைச்சட்டத்தின் கீழ் அனுபவ உரிமை பட்டா வழங்குவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி கோட்டம் துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் முன்னிலை வகித்தார். உதவி வன பாதுகாவலர் செல்வம், தாசில்தார் தணிகைவேல், ஆதிதிராவிடர் நல பழங்குடியின தாசில்தார் குமார், துணை தாசில்தார் ஜெயசித்ரா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.பழங்குடியின மக்கள் பேசுகையில், 'குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். நெடுங்குன்றம் பகுதிக்கே வந்து ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்; ரோடு வசதி மேம்படுத்த வேண்டும்,' என்றனர்.சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமை வகித்து பேசியதாவது:பழங்குடியின மக்களுக்கான அனுபவ உரிமை பட்டா வழங்குதல், குடிநீர், 'சோலார்' விளக்கு பொருத்துதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது. பழங்குடியின மக்கள் கோரிக்கைகள் இருந்தால் தெரிவியுங்கள்; ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.ரேஷன் பொருட்கள் நேரடியாக வந்து வழங்குவதற்கான திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும். பழங்குடியின மக்கள், பாரம்பரியம், கலாசாரம், மொழி மறக்காமல் அவற்றை வருங்கால சந்ததிகளுக்கும் கற்றுத்தர வேண்டும்.இவ்வாறு, பேசினார்.புலிகள் காப்பகம் துணை இயக்குனர் பேசியதாவது:பொள்ளாச்சி வனக்கோட்டத்தில், 17 பழங்குடியின குடியிருப்புகள் உள்ளன. அதில், அனுபவ உரிமை பட்டா கோரிய, 735 மனுக்கள் பெறப்பட்டன. பழங்குடியின மக்கள் குடியிருப்புக்கு, மின் வசதி உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த, 32 கோடி ரூபாய் அரசிடம் கோரப்பட்டுள்ளது. அதில், 20 கோடி ரூபாய் கிடைத்தால் கூட மின் இணைப்பு வழங்குவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது:பழங்குடியின மக்கள், அனுபவ உரிமை பட்டா கோரி, 735 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், 47 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. முதற்கட்டமாக, 172, அடுத்த கட்டமாக, 187 என மொத்தம், 329 பட்டாக்கள் வழங்கப்பட்டன.வனத்துறை அலுவலர்களால் தனிநபர் அனுபவ உரிமை பட்டா வழங்க ஒப்புதலுக்கு, 153 பட்டாக்கள் வைக்கப்படுகிறது. 155 மனுக்கள் நிராகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள மனுக்கள் மீது, பொங்கலுக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE