பொள்ளாச்சி, உடுமலை கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, உயர்கல்விக்கான படிப்பு உதவித்தொகை வழங்குவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. கல்வி மாவட்டத்தில், இந்த தேர்வை எழுத, 667 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.இந்நிலையில், தேசிய திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 10 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வை கல்வி மாவட்ட அதிகாரிகள் கண்காணிப்பு செய்தனர். மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்று எழுதினர்.காலை, 9:00 முதல், 11:00 மணி வரை மனத்திறன் தேர்வு; காலை, 11:30 மணி முதல், 1:30 மணி வரை படிப்பறிவுத்தேர்வும் நடந்தது. 'இத்தேர்வினை எழுத விண்ணப்பித்த, 667 பேரில், 615 பேர் தேர்வு எழுதினர். அதில், 52 பேர் தேர்வு எழுதவில்லை,' என கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.உடுமலைஉடுமலை கல்வி மாவட்டத்தில், பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட ஐந்து மையங்களில், 397 மாணவர்கள் தேர்வு எழுத பதிவு செய்தனர். நேற்றைய தேர்வில், 41 பேர் 'ஆப்சென்ட்' ஆகி, 356 மாணவர்கள் தேர்வு எழுதினர்.தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, அவர்களின் உயர் கல்வி நிறைவு பெறும் வரை அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமி, தேர்வு மையங்களை பார்வையிட்டார்.கேள்விகள் ரொம்ப ஈஸி; ஆர்வமாக பங்கேற்ற மாணவர்கள்!நாகேஸ்வரி, நேதாஜி ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி: தேசிய திறனாய்வு தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிமையாக இருந்தன. மனப்பாடம் மற்றும் படிப்பறிவுத்தேர்வுகளில் வினாக்கள் எளிதாக இருந்ததால், முழு திருப்தியுடன் தேர்வு எழுதியுள்ளேன்.யுவனிதா, வித்யோதயா பள்ளி, பொள்ளாச்சி:தேர்வில் வினாக்கள், 'மாடரேட்' ஆக இருந்தது. மனத்திறன் பகுதியில் வினாக்களை புரிந்து விடையளிக்கும் வகையில் இருந்தது. தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு நம்பிக்கையோடு பதில் எழுதியுள்ளேன்.ஆதித்யன், அரசுப்பள்ளி, தொண்டாமுத்துார்: மனத்திறன் தேர்வு, படிப்பறிவுத்தேர்வு இரண்டும் எதிர்பார்த்த மாதிரியாக இருந்ததால், நம்பிக்கையோடு குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு எழுதி முடித்தேன். தெரிந்த வினாக்களாக இடம் பெற்றிருந்ததால், 'ரிலாக்ஸ்' ஆக தேர்வு எழுதினேன்.அஞ்சலி, நேதாஜி ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி:தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள், பொது அறிவை மேம்படுத்தும் வகையில் இருந்தது. 'ஸ்காலர்ஷிப்' பெறுவதற்காக நடத்தப்பட்ட தேர்வு என்பதால், கவனமுடன் படித்திருந்தேன். தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிமையாக இருந்ததால், நன்றாக எழுதியுள்ளேன் - நிருபர் குழு -.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE