புதுடில்லி: 'காங்கிரஸ் தலைவர் வேட்பாளர் பற்றி, ஒருமித்த கருத்த ஏற்படுத்தும் முயற்சி நடப்பதால், உட்கட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிட தாமதமாகியுள்ளது' என, கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

லோக்சபாவுக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில், காங்கிரஸ் படு தோல்விஅடைந்தது. தலைவர் பதவியிலிருந்து ராகுல் விலகினார். தற்காலிக தலைவராக, சோனியா தேர்வு செய்யப்பட்டார்.கட்சிக்கு முழு நேர தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, அதிகரித்து வருகிறது. உட்கட்சி தேர்தல் நடத்தி, தலைவரை தேர்வு செய்ய, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் கட்சியில் அமைப்பு தேர்தலலை நடத்த திட்டமிட்டு, அதற்கான தேதிகளை, இம்மாத இறுதியில் அறிவிக்க, கட்சி மேலிடம் முடிவு செய்திருந்தது. 'காங்கிரஸ் தலைவராக ராகுல் மீண்டும், ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்' என, சோனியா விரும்புகிறார்.
இதனால், தலைவர் வேட்பாளர் பற்றி, கட்சியில் ஒருமித்த கருத்து ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:தலைவர் பதவிக்கான நபரை, போட்டியின்றி தேர்ந்தெடுக்க, மூத்த தலைவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படுத்தும் முயற்சி தொடர்கிறது. அதனால், கட்சி அமைப்பு தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த மாதம் முதல் வாரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படலாம். மூத்த தலைவர்களை, சோனியா சந்தித்து, தலைவர் வேட்பாளர் பற்றி ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சி தலைமைக்கு எதிராக கடிதம் எழுதிய, 23 தலைவர்களையும் சோனியா சந்தித்து பேசிஉள்ளார். காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என, தலைவர்கள் பலர் விரும்புகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE