கோவை:கால்கள் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் சிரமப்பட்ட நாய்க்கு சக்கர நாற்காலி வடிவமைத்து உதவி செய்த கோவையை சேர்ந்த ஐ.டி., பெண் ஊழியரை பிரதமர் மோடி பாராட்டினார். இதற்கு அவர் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
நேற்று, 72வது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, ''கோவையை சேர்ந்த காயத்ரி என்பவர் நடக்க முடியாமல் தவித்த நாய்க்கு, தனது தந்தையின் உதவியால் சக்கர நாற்காலி அமைத்து கொடுத்துள்ளார்.மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும் இந்நிகழ்வை, சமூக ஊடகங்களில் நாம் காணலாம். அனைத்து உயிர்களிடத்திலும் தயையும், கருணையும் மனதில் நிறைந்திருந்தால் மட்டுமே இப்படி செய்ய முடியும்,'' என, பாராட்டினார்.
பிரதமர் பாராட்டிய காயத்ரி மற்றும் அவரது தந்தை காசிலிங்கம் கோவை, சாயிபாபாகாலனி பகுதியில் வசித்து வருகின்றனர். மெக்கானிக்கல் இன்ஜினியரான காசிலிங்கம் மற்றும் ஐ.டி., ஊழியரான மகள் காயத்ரி இணைந்து சில மாதங்களுக்கு முன், சீராபாளையம் பகுதியில் இருந்து நாய் ஒன்றை தத்தெடுத்தனர்.
'வீரா' என்ற அந்த நான்கு வயது நாய்க்கு பின்னங்கால்கள் செயல்படவில்லை. இதற்காக பி.வி.சி., பைப் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, சக்கர நாற்காலியை வடிவமைத்தனர். தற்போது அந்த நாய் மகிழ்ச்சியாக நடமாடி வருகிறது. இதற்கு தான் பிரதமர் மோடி, நெகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்தார்.
தன்னார்வலர்களுக்கு துாண்டுகோல்:
பிரதமரின் பாராட்டு குறித்து காசிலிங்கம் மற்றும் காயத்ரியிடம் கேட்டபோது, 'உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்று பாப்பா பாட்டில் பாரதியார் கூறியுள்ளார். பின்னங்கால்கள் செயல்படாத நிலையில் காப்பகத்தில் இருந்து வீராவை அழைத்து வந்தபோது, எங்கள் மனதில் பாரதியின் பாட்டு தான் தோன்றியது. வீராவை நடக்க வைக்க நாங்கள், 'வீல் சேர்' வடிவமைத்தோம். இதை பிரதமர் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலர் இந்த மாதிரி உயிர்களிடம் அன்பு காட்டி, ஆதரவுடன் இருக்க உந்துதலாக இருக்கும் என்று நம்புகிறோம். இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு மிகவும் துாண்டுகோலாக இருக்கும்' என்றனர்.பிரதமரின் பாராட்டை தொடர்ந்து விலங்கு பாதுகாவலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என, பலரும் இவர்களின் மனிதாபிமானத்தை பாராட்டி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE