மதுரை : ''தரைமட்டத்தில் காற்று மாசுபாட்டால் செயற்கையாக உருவாகும் ஓசோனால் நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்,'' என மதுரை அமெரிக்கன் கல்லுாரி உதவி பேராசிரியர் ராஜேஷ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: வளிமண்டலத்தில் எங்கு காணப்படுகிறது என்பதை பொறுத்தே ஓசோன் நல்லதாகவும் கெட்டதாகவும் பிரிக்கப்படுகிறது. மேல் அடுக்கில் அடுக்கு மண்டலத்தில் இயற்கையாக காணப்படும் ஓசோன் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும் நல்லது.இது சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்வீச்சில் இருந்து பாதுகாப்பு அரணாக இருந்து நம்மை காக்கிறது. அதிகளவில் வெளியேற்றப்படும் கரியமில வாயுக்களால் காற்று மாசுபட்டு இந்த ஓசோனில் துளை உருவாகியுள்ளது.
தற்போது இந்த துளையின் அளவு குறைந்து வருவதும் நல்ல விஷயம்.அதேநேரத்தில் தரைமட்டத்தில் மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்படும் ஓசோன் ஆபத்தானது. இது புகை மூட்டத்தின் ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளது. இந்த ஓசோன் நேரடியாக காற்றில் வெளியேற்றப் படுவதில்லை. நைட்ரஜனின் ஆக்சைடுகள் மற்றும் ஆவியாகும் கரிம சேர்மங்களுக்கு இடையே உருவாகும் வேதியியல் எதிர்வினைகளே காரணம்.
கார்கள், மின்உற்பத்தி நிலையங்கள், தொழில்துறை கொதிகலன்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், ரசாயன ஆலைகள் மற்றும் பிற தொழில்களின் மூலங்களால் உமிழப்படும் மாசுபாடுகள் சூரியஒளியின் முன்னிலையில் வேதியியல் ரீதியாக வினைபுரியும் போது இது நிகழ்கிறது. இதை அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. குப்பைகளை எரிப்பதும் அதிக புகை கக்கும் வாகனங்களும் முக்கிய காரணம். நகர்ப்பகுதிகளில் அதிக வெயில் நாட்களில் இந்த ஓசோன் ஆரோக்கியமற்ற அளவை எட்டலாம். குளிர்ந்த மாதங்களில் இந்த ஓசோன் காற்றால் நீண்ட துாரத்திற்கு கொண்டு செல்லப்படுவதால் இன்னும் அதிக அளவை எட்டும்.
நகர்ப்பகுதியில் ஏற்படும் இப்பிரச்னை காற்றின் மூலம் கிராமப்புறங்களுக்கும் கடத்தப்படுகிறது. நுரையீரல் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் ஓசோன் கொண்ட காற்றை சுவாசிக்கும் போது உடல் நலம் பாதிக்கப்படலாம். குப்பைகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும். வாகனங்களை முறையாக பராமரித்து கரும்புகை கக்குவதை குறைக்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE