லண்டன்: பிரிட்டனில் பரவி வரும், அதிக வீரியம் உடைய, உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ், பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உட்பட, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, லெபனான் ஆகிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில், உருமாற்றம் அடைந்துள்ள புதிய குணாதிசயம் உடைய கொரோனா வைரஸ், சமீபத்தில் கண்டறியப்பட்டது. 'அதிக வீரியம் உடைய இந்த வைரஸ், முந்தைய வகை கொரோனா வைரசை விட, 70 சதவீதம் வேகமாக பரவக்கூடியது' என, ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதை உறுதி செய்யும் விதமாக, பிரிட்டனின் தொற்று எண்ணிக்கை, மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து, இந்தியா உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட நாடுகள், பிரிட்டனுடனான இருவழி விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், டென்மார்க், ஸ்பெயின், ஸ்வீடன், நெதர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும், புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில், தம்பதிக்கு, இந்த புதிய வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள், சமீபத்தில் பிரிட்டனுக்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதால், இந்த புதிய வகை தொற்று, கனடாவில் சமூக பரவலாக மாறிஇருக்கலாம் என, தலைநகர் ஆன்டாரியோவின் தலைமை மருத்துவ அதிகாரி, நேற்று முன்தினம் தெரிவித்தார்.
பிரிட்டனில் இருந்து ஜப்பான் திரும்பிய ஐந்து பேருக்கு, புதிய வகை தொற்று, நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று முதல், அடுத்த மாதம் இறுதி வரை, வெளிநாட்டு பயணியர் ஜப்பான் வர, அந்நாடு தற்காலிக தடை விதித்துள்ளது.
சான்றிதழ்
இவை தவிர, ஆஸ்திரேலியா மற்றும் மேற்காசிய நாடான லெபனானிலும், புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில், புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டதாக, இதுவரை தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு, அமெரிக்க அரசு தடை விதிக்கவில்லை.
'இன்று முதல், பிரிட்டனில் இருந்து அமெரிக்கா வரும் பயணியர், புறப்படு வதற்கு, 72 மணி நேரம் முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிக வீரியம் உள்ள இந்த புதிய வகை தொற்று, கொரோனா தடுப்பூசியின் செயல்திறனில் பாதிப்பை ஏற்படுத்தாது' என, ஆய்வாளர்கள் தெரிவித்துஉள்ளனர்.
'அலட்சிய மனப்பான்மை'
உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதானாம் கெப்ரியேசஸ் கூறியதாவது: கொரோனா பெருந்தொற்று பரவல் வாயிலாக, நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இது போன்ற நோய் பரவல் நேரங்களில், கோடி கோடியாக பணத்தை துாக்கி எறிந்து, நிலைமையை சமாளித்து விடுகிறோம். நிலைமை சீரானவுடன் அதை மறந்துவிடுகிறோம். மீண்டும் இது போல ஒரு ஆபத்தை தடுக்க தவறி விடுகிறோம். இந்த குறுகிய பார்வை ஆபத்தானது. இப்படிப்பட்ட அலட்சிய மனப்பான்மையை புரிந்து கொள்ள முடியவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE