சென்னை: தமிழக அரசின் பொங்கல் பரிசுக்கான டோக்கன்களை அதிமுக.,வினர் விநியோகிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், ‛அரசு கஜானாவிலிருந்து போகும் பரிசுத் திட்ட நிதியை அதிமுக.,வினர் ஏன் கையாள வேண்டும்?' எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா ஊரடங்கில் மக்கள் தவித்த நேரத்தில் நிவாரண உதவியாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7,500 கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதேபோல், நிவர் புயல் பாதிப்பிற்கு ரூ.5 ஆயிரம், விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் ரூ.10 ஆயிரம் நிவாரணமாக வழங்கிட கோரிக்கை வைத்தேன்.

ஆனால் கோரிக்கையை நிராகரித்து கொரோனா கால ஊழல் டெண்டர்களில் சுறுசுறுப்பாகவும், சுயநலத்துடனும் இருந்தார் முதல்வர் பழனிசாமி. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2,500 வழங்கப்படும் திட்டம் வரவேற்புக்குரியது. ஆனால் தேர்தலை மனதில் வைத்து, ஏதோ அதிமுக நிதியிலிருந்து வழங்கப்படுவது போல காட்டிக்கொள்ள முதல்வர் முயற்சி செய்து வருகிறார்.

தமிழகம் முழுவதும் பல இடங்களில் அதிமுக.,வினரை வைத்து ‛டோக்கன் விநியோகம்' செய்ய வைக்கிறார். அரசு கஜானாவிலிருந்து போகும் பரிசுத் திட்ட நிதியை அதிமுக.,வினர் ஏன் கையாள வேண்டும்?. டோக்கன் மற்றும் ரூ.2,500 வழங்கும் பணிகள் முறைகேடுகளுக்கு இடமின்றி ரேசன் கடை ஊழியர்கள் மூலம் மட்டுமே நடைபெற்றிட வேண்டும். அதிமுக.,வினர் பொங்கல் பரிசு டோக்கன் வழங்குவதை முதல்வர் தடுத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE