தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: பெண் குழந்தைகள் மட்டுமின்றி, பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க, தி.மு.க., ஆட்சி அமைந்ததும், மாவட்ட ரீதியாக தனி நீதிமன்றம் அமைக்கப்படும். ஒரு நாள் கூட தாமதமின்றி, தண்டனை பெற்றுக் கொடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தைரியமாக புகார் கொடுப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், ரகசியப் பிரிவு ஒன்று, மாநில அளவில் உருவாக்கப்படும்.
'டவுட்' தனபாலு: எல்லாம் சரி, அத்தகைய குற்றங்கள் நடக்காமல் தடுக்க, தமிழக இளைஞர்களை நல்வழிப்படுத்துவோம்; தேவையான அறநெறி கருத்துகளை அளிப்போம். ஆண் - பெண் சமம் என்ற உணர்வை ஏற்படுத்த, எங்கள் கட்சியின் அனைத்து பிரிவுகளையும் பயன்படுத்துவோம் என சொல்ல மாட்டேன் என்கிறீர்களே... எப்படியோ, உங்கள் ஆசைப்படி, உடனடி தண்டனையும், பாலியல் குற்றங்களை குறைக்கும் என்பதில், யாருக்கும், 'டவுட்' இருக்க முடியாது!
இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: அ.தி.மு.க.,வின் இரு பெரும் தலைவர்களான, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லை. நாம் தான், நாட்டு மக்கள் தான் வாரிசுகள். இன்றைக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள், எம்.ஜி.ஆர்., பெயரை சொல்கின்றனர். அவர் உருவாக்கிய அ.தி.மு.க.,வை வீழ்த்த நினைப்பவர்கள், வீழ்ந்து போவர்.
'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வது எதார்த்தமா அல்லது சாபமா என்ற, 'டவுட்' பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும். எனினும், நீங்கள் குறிப்பிடுவது, தி.மு.க.,வைத் தான் என்பது, இந்த தேர்தல் நேரத்தில், அனைவருக்கும், 'டவுட்' இன்றி புரிந்திருக்கும். எப்படியோ, தமிழக தேர்தல் களம் - அ.தி.மு.க., - தி.மு.க., என்றே இன்னும் சுழன்று கொண்டிருக்கிறது. பிற கட்சிகள் கதி என்னவோ என்பது தான், பதில் காண முடியாத 'டவுட்'டாக உள்ளது!
துணை முதல்வர் பன்னீர்செல்வம்: மத்தியில், 16 ஆண்டுகள் கூட்டணி அரசிலிருந்த, தி.மு.க., ஏதேனும் ஒரு திட்டத்தை, தமிழகத்திற்கு கொண்டு வந்ததா என்பதை, ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும். நாங்கள் மத்திய அரசில் இல்லை; அமைச்சர்களாக இல்லை. எனினும், மதுரையில், 1,400 கோடி ரூபாயில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை வந்துள்ளது. ஒரே ஆண்டில், 11 அரசு மருத்துவக் கல்லுாரிகளைக் கொண்டு வந்துள்ளோம். தேவையான திட்டங்களை பெறவே, மத்தியஅரசை ஆதரிக்கிறோம்.
'டவுட்' தனபாலு: பெரிய, 'இமேஜ்' இல்லாத தலைவர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் இல்லாத நிலையில், இத்தனை ஆண்டுகள் கொண்டு சென்றதே பெரிய சாதனை தான். அதிலும், தொண்டர்கள் பலம் வாய்ந்த, தி.மு.க.,வை வலுவோடு எதிர்த்து வரும், அ.தி.மு.க.,வுக்கு, மத்தியில், பலம் வாய்ந்த, பா.ஜ., ஆதரவு அவசியம் தான் என்பதில், உங்கள் கட்சியினருக்கு, 'டவுட்'டே வராது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE