'கரடி' விடுறாங்களே...
எஸ். ராமசுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல்வாதி என்றாலே புருடா விடுவோர் தான் என்பதை, இந்நாட்டு மக்கள் அனைவரும் அறிவோம்.
எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் முழு மெஜாரிட்டி பெற்று, முதல்வராக அமரும் கனவில் இருக்கிறார், கமல். அதற்காக, கமலின் கட்சியான, மக்கள் நீதி மையத்தின் பொதுச் செயலரான குமாரவேல், 'புதுக் கரடி' ஒன்றை அவிழ்த்து விட்டிருக்கிறார்.
அதாவது, 'மறைந்த எம்.ஜி.ஆர்., தான், கமலை அரசியலுக்கு அழைத்தார்' எனக் கூறியுள்ளார். தற்போது, எம்.ஜி.ஆர்., உயிருடன் இல்லை. இருந்திருந்தால், 'எப்போது அழைத்தேன்?' என, அவரே நேரடியாக கேட்டிருப்பார்.அது சரி... எம்.ஜி.ஆர்., அழைத்த போதே, கமல் ஏன் அரசியலுக்கு வரவில்லை?எவ்வளவு பெரிய செல்வாக்குமிக்க மனிதர், அவர். பெரும் இயக்கத்தின் தலைவர், தமிழகத்தின் முதல்வர்...
அப்படிப்பட்டவர் அழைக்கும் போது, கமல், அரசியலுக்கு வந்திருக்க வேண்டியது தானே முறை.எம்.ஜி.ஆரின் அழைப்பை புறக்கணிப்பது தான், அவர் மீது கமல்
வைத்திருந்த மரியாதையா?அப்போதே அரசியலுக்கு வந்திருந்தால்,ஓர் அமைச்சராகி, இப்போது, 'நீதி, நேர்மை' என, கடை விரித்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே.
கமலின் அந்த நேர்மையைக் கண்டு, எம்.ஜி.ஆரும் பாராட்டி இருப்பார்; மக்களும் மகிழ்ச்சி அடைந்திருப்பர். கமலின் நேர்மையைக் கண்டு, மற்ற அமைச்சர்களும் அடக்கி வாசித்திருப்பரே!
மறுப்பு சொல்ல ஆளில்லை என்பதற்காக, இப்படியெல்லாமா, 'கரடி' விடுவது?அரசியலில் இறங்கிவிட்டால், இது போன்ற பல புருடாக்களை அள்ளி வீசித் தான் ஆக வேண்டியுள்ளது.
சிவாஜிகணேசனை இகழாதீர்!
சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடிகர் யாராவது கட்சித் துவங்கினால், உடனே அவர் எம்.ஜி.ஆர்., போல வெற்றி பெறுவாரா இல்லை சிவாஜிகணேசனை போல தோல்வியை தழுவுவாரா என்ற விவாதம், ஊடகங்களில் நடக்கிறதுஅது ஏனென்றால், திரையுலகில் இருந்து வந்து, தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த ஒரே நடிகர், எம்.ஜி.ஆர்., என்பதால் தான். அதற்காக, சிவாஜி கணேசனை ஏன் இகழ்ந்து பேச வேண்டும்?
எம்.ஜி.ஆர்., திடீரென கட்சி துவக்கி, ஆட்சியை பிடித்து விடவில்லை. 'காமராஜர், என் தலைவர். அண்ணாதுரை, என் வழிகாட்டி' எனக் குறிப்பிட்டு, அவர்களின் அபிமானிகளை, தன் பக்கம் இழுத்துக்கொண்டார்.எம்.ஜி.ஆர்., புகழுக்கு காரணமாக இருந்தோரில், கருணாநிதியும் ஒருவர். இவர் எழுதிய வசனங்களால், எம்.ஜி.ஆர்., திரைத்துறையில் பிரகாசிக்க துவங்கினார். திரைத்துறையில், நடிப்பு என்றால், சிவாஜிகணேசன் தான். எம்.ஜி.ஆர்., சிறந்த நடிகர் அல்ல என்பது, அனைவருக்கும் தெரியும். அதற்காக, சினிமா துறையில் இருப்போர், எம்.ஜி.ஆரை இகழ்வது சரியாக இருக்குமா?அதேபோன்றது தான் அரசியலில், சிவாஜி கணேசனை விமர்சிப்பதும்.எம்.ஜி.ஆரை, வள்ளல்எனக் கூற, சிவாஜி கணேசனை கஞ்சனாக உருவகப்படுத்துகின்றனர். இந்த தேசத்திற்கும், மக்களுக்கும் சிவாஜிகணேசன் அள்ளிக்கொடுத்தது ஏராளம். அதை ஏன் திட்டமிட்டு மறைக்கின்றனர்?தமிழகத்தில் பொற்கால ஆட்சி கொடுத்தது, காமராஜர் மட்டும் தான். அவரையே நம் மக்கள், தேர்தலில் தோற்கடித்தனர். ஏதோ சிவாஜிகணேசன் மட்டும் தான், தேர்தலில் தோல்வி அடைந்தது போல, விமர்சனம் செய்கின்றனர்.நடிகர்கள் ரஜினியும், கமலும் அரசியலில் இறங்கியுள்ளனர். 'எம்.ஜி.ஆர்., ஆட்சியை அமைப்போம்' எனக் கூறுவதைவிட, தங்களுக்கான தனி அடையாளத்தை, இருவரும் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
எம்.ஜி.ஆரை புகழ வேண்டும் என்பதற்காக, சிவாஜிகணேசனை இகழ வேண்டாமே... அவர், தமிழகத்திற்கு பெருமை சேர்த்த, மாபெரும் நடிகர் என்பதை மறந்துவிட வேண்டாம்.
தேர்தலுக்காக அஞ்சலாமா அரசு?
ரா.கணேசன், புதுச்சேரியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜனவரி முதல், சொத்து வரியுடன் சேர்த்து, திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் வசூலிக்கப்படும் என, சென்னை மாநகராட்சி அறிவித்தது.இதற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கொரோனாவை காரணம் காட்டி, திடக்கழிவு பயனாளர் கட்டணத்தை, காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக, மாநகராட்சி அறிவித்துள்ளது.சென்னை மாநகராட்சியில், தினமும், 5,000 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது.திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, கழிவு உருவாக்குபவர்கள் வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்ப பயனாளர் கட்டணத்தை, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும் என, மாநகராட்சி உத்தரவிட்டது.இது ஒன்றும், இமாலய வரி அல்ல. 1 சதுர அடிக்கு, 50 பைசா என்ற கணக்கில், ஆறு மாதத்திற்கு ஒருமுறை, சொத்து உரிமையாளர் வரி கட்ட வேண்டும்.அதாவது, சென்னை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 1,000 சதுர அடி வீடு வைத்திருப்பவர், ஆறு மாதத்திற்கு ஒருமுறை, 500 ரூபாய் கட்ட வேண்டும்.இதனால் மாநகராட்சிக்கு, ஆண்டுக்கு, 150 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும்.அவர் வீட்டு குப்பையை, அன்றாடம் வாசலுக்கு வந்து பெறுவதற்காக தான், இந்த வரி.இந்த வகையான ஏற்பாடு, காங்கிரஸ் ஆளும் புதுவை மாநிலத்தில், சில ஆண்டுகளாகவே இருக்கிறது; அங்கு, எந்த வித எதிர்ப்பும் இல்லை.சதுர அடி நிலம், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பு பெரும், சென்னை மாநகரில், 50 பைசா வரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது கோபத்தையும், நகைப்பையும் தருகிறது.இந்த வரி, குப்பையை அகற்றும் துப்புரவாளர்களுக்கு உரிய ஊதியம் கிடைக்க வழிவகை செய்யும். வழக்கம் போல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இத்திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.முதல்வர் இ.பி.எஸ்.,தலைமையிலான அரசு, முதலில், உங்கள் கட்சியினரின், 'டிவி சேனல்' கட்டணத்தை ரத்து செய்யுங்கள் என, சொல்லியிருக்கலாம்.அதை விடுத்து, தேர்தலுக்கு அஞ்சி, வரி விதிப்பை வாபஸ் பெற்றிருக்கிறது.ஜெயலலிதாவிடம் மக்கள் விரும்பியது, எதற்கும் அஞ்சாமை குணத்தை தான். அவர் வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும், இ.பி.எஸ்., இப்படி பின்வாங்கி
யிருக்கக் கூடாது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE