துடில்லி : ''வரும், 2025க்குள், நாட்டின், 25 நகரங்களுக்கு, 'மெட்ரோ' ரயில் சேவை விரிவுபடுத்தப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
டில்லியில், ஜனக்புரி மேற்கு -- தாவரவியல் பூங்கா இடையே, நாட்டிலேயே முதல் முறையாக, ஓட்டுனர் இல்லாத, தானியங்கி, 'மெட்ரோ' ரயில் சேவை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
'வீடியோ கான்பரன்ஸ்'
இந்த சேவையை, பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று துவக்கி வைத்தார்.மெட்ரோ ரயில், பஸ் உள்ளிட்ட பயணங்கள், வாகன நிறுத்த கட்டணம், 'ஷாப்பிங்' உள்ளிட்டவைக்கு பயன்படுத்த கூடிய, என்.சி.எம்.சி., எனப்படும், தேசிய பொது பயண அட்டையையும், பிரதமர் அறிமுகப்படுத்தினார்.இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:ஓட்டுனர் இல்லா ரயில் சேவை, உலகின் சில நாடுகளில் மட்டுமே உள்ளது. இன்றில் இருந்து, நம் நாடும், பெருமைமிகு அந்த பட்டியலில் இணைகிறது. கடந்த காலங்களில், நகரமயமாக்கல் வேகமெடுத்த போது, அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள், எதிர்கால தேவைகளில் அதிக கவனம் செலுத்தவில்லை. அரைகுறை மனதுடன் மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளில், குழப்பம் மட்டுமே நீடித்தது.

அந்த வேளையில், உள்கட்டமைப்பு மற்றும் மக்களின் தேவைகளுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்தது. நகரமயமாக்கல் என்பதை, சவாலாக பார்க்க கூடாது. உள்கட்டமைப்பை மேம்படுத்தி, மக்களின் வாழ்க்கையை எளிதாக்க, நமக்கு கிடைத்த நல்வாய்ப்பாகவே அதை அணுக வேண்டும்; அதை தான், பா.ஜ., அரசு செய்து வருகிறது.
செலவு குறையும்
கடந்த, 2014ல், பா.ஜ., ஆட்சிக்கு வந்தபோது, நாட்டின் ஐந்து நகரங்களில், 248 கி.மீ., துாரத்திற்கு மட்டுமே, மெட்ரோ ரயில் சேவை இருந்தன.தற்போது, 18 நகரங்களில், 700 கி.மீ., துாரத்திற்கு, சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வரும், 2025க்குள், நாட்டின், 25 நகரங்களில், 1,700 கி.மீ., துாரத்திற்கு, மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும்.உத்தர பிரதேசத்தின் மீரட் மற்றும் டில்லி இடையிலான, ஆர்.ஆர்.டி.எஸ்., எனப்படும், விரைவு ரயில் சேவை வாயிலாக, இருநகரங்களுக்கு இடையிலான பயண நேரம், ஒரு மணி நேரத்திற்கும் குறைவானதாகிவிடும். குறைவான பயணியர் உள்ள நகரங்களில், 'மெட்ரோ லைட்' என்ற சேவை அறிமுகப்படுத்தப்படும். வழக்கமான மெட்ரோ சேவையை விட, இதற்கு, 40 சதவீதம் செலவு குறையும்.
ரூ.8 கோடி
மேலும், 'மெட்ரோ நியோ' என்ற சேவையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வழக்கமான மெட்ரோ சேவைக்கான செலவில், 25 சதவீதத்தில், இந்த நியோ சேவையை உருவாக்கிவிட முடியும்.நீர்நிலைகளால் சூழ்ந்து உள்ள நகரங்களில், நீர்நிலை மெட்ரோ அறிமுகப்படுத்தும் திட்டமும் உள்ளது.'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், நான்கு பெரிய நிறுவனங்கள், மெட்ரோ ரயில் பெட்டிகளை, உள்நாட்டிலேயே தயாரிக்கின்றன.
இதன் வாயிலாக, ஒரு பெட்டியின் செலவு, 12 கோடி ரூபாயில் இருந்து, 8 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.இந்த தேசிய பொது பயண அட்டை வாயிலாக, நாடு முழுதும், பல்வேறு பொது போக்குவரத்துக்கு, இந்த ஒரே அட்டையை மக்கள் பயன்படுத்த முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.
100வது விவசாயி ரயில்: பிரதமர் துவக்கி வைத்தார்
காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு விவசாய விளைபொருட்கள், தாமதமின்றி நாடு முழுதும் விரைவில் சென்று சேர்வதற்காக, விவசாயி ரயில் சேவையை, ஆகஸ்டில் மத்திய அரசு செயல்படுத்தியது. மஹாராஷ்டிராவின், தேவ்லாலியில் இருந்து, பீஹாரின், தனாபூர் வரையில், முதல் விவசாயி ரயில் இயக்கப்பட்டது. இதில், காய்கறி, பழங்கள் எடுத்துச் செல்ல, 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. வாரத்திற்கு ஒரு நாள் இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை, விவசாயிகளின் ஆதரவு காரணமாக, வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்படுகின்றன. மஹாராஷ்டிராவின் சங்கோலாவில் இருந்து, மேற்கு வங்கத்தின் ஷாலிமார் வரையிலான, விவசாயி ரயிலின், 100வது ரயில் சேவையை, பிரதமர் மோடி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE