புதுடில்லி: ''வல்லரசாக உருவாக தேவையான அனைத்து ஆற்றல்களும், நம்மிடம் உள்ளன,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய நிர்வாகவியல் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில், ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் நேற்று பங்கேற்றார்.
அப்போது, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அவர் பேசியதாவது:உலகம் உருண்டை என்பதையும், அதன் சுழற்சி குறித்தும், ஜெர்மனியின் வானியல் நிபுணர் காப்பர்னிகஸ் கண்டுபிடிப்பதற்கு, 1,000 ஆண்டுகள் முன்பே, ஆர்யபட்டா உறுதி செய்துவிட்டார். இதுபோல, கணிதம், இயற்பியல், வேதியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், வெளிநாட்டு நிபுணர்களின் கண்டுபிடிப்புக்கு முன்பே, நாம் பல சாதனைகளை நிகழ்த்திவிட்டோம். நம் வரலாற்று பெருமைகளை இளையதலைமுறை அறியவேண்டும்.
அதற்கு, நவீன கல்விமுறை தடையாக இருந்துவிட கூடாது.எந்த சவாலான சூழ்நிலைகளையும், தங்கள் கண்டுபிடிப்பு, புதுமை மற்றும் யோசனைகளின் துணையுடன், புதிய வாய்ப்பாக உருவாக்க கூடிய திறமை உடையவர்கள், நம் இளைஞர்கள்.புதிய இந்தியாவை உருவாக்க, இளைய தலைமுறையினரை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். நம் நாட்டை, வல்லரசாக உருவாக்க வேண்டுமானால், வளர்ச்சி என்பது, அனைத்து மாநிலங்களிலும் பரவலாக இருக்க வேண்டும்.
மேலும், கல்வி, சுகாதாரம், தொழில்துறை ஆகியவற்றில், நம் திறமைகள் முழுமையாக இன்னும் பயன்படுத்தப்படவில்லை. அவற்றில், குறிப்பிடத்தகுந்த பல சாதனைகளை நாம் நிகழ்த்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE