சென்னை : தமிழகத்தில், பா.ஜ., - அ.தி.மு.க., இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட உரசல், நாளுக்கு நாள் பெரிதாகி வந்ததை தொடர்ந்து, முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்து, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் பேசினார். பா.ஜ., மேலிட பொறுப்பாளர் உத்தரவின்படி, இந்த சந்திப்பு நடந்ததாக தெரிய வந்துள்ளது.
லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., இடம் பெற்றது. தற்போதும், அந்த கூட்டணி தொடர்கிறது. நவம்பரில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் முன்னிலையில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வம், 'சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி தொடரும்' என, அறிவித்தார்.
மீண்டும் மலருமா
'லோக்சபா தேர்தல் கூட்டணி, சட்டசபை தேர்தலுக்கும் தொடரும்' என, முதல்வரும் தெரிவித்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, அமித்ஷா, கூட்டணி குறித்து எதுவும் பேசாமல், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை விமர்சித்து பேசி விட்டு போய் விட்டார். அதனால், இரு கட்சிகளுக்கும் இடையில், கூட்டணி மீண்டும் மலருமா என்ற கேள்வி எழுந்தது.
இதற்கிடையில், அ.தி.மு.க., சார்பில், முதல்வர் வேட்பாளராக, தற்போதைய முதல்வர் இ.பி.எஸ்., அறிவிக்கப்பட்டார். அவரே, அ.தி.மு.க., கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்றும், அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர். அதை ஏற்க, தமிழக பா.ஜ., தலைவர்கள் மறுத்தனர். ‛கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை, எங்கள் கட்சியின் தேசிய தலைமை தான் அறிவிக்கும்' என்றனர்.
இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே, உரசல் ஏற்பட்டது. இரு கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள், ஒருவரை ஒருவர் விமர்சிக்க துவங்கினர்.
நேற்று முன்தினம், அ.தி.மு.க., தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, பா.ஜ.,வை பெயர் குறிப்பிடாமல், மறைமுகமாக விமர்சித்தார். மேலும், ''தேசிய கட்சி, மாநில கட்சி என, எந்த கட்சி வந்தாலும், அ.தி.மு.க., தலைமையில் தான் கூட்டணி. கூட்டணி ஆட்சி என்ற எண்ணத்தோடு, யாரும் வர வேண்டாம்,'' என்றும், அவர் கடுமையாக பேசினார்.முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஒப்புதலுடன் தான், அவர் அப்படி பேசியதாக தகவல் வெளியானது. இவ்விபரம், பா.ஜ., தலைமைக்கு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளரான சி.டி.ரவி, முதல்வருடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
பின், அவர் உத்தரவிட்டதை தொடர்ந்து, நேற்று தமிழக பா.ஜ., தலைவர் முருகன், கட்சி நிர்வாகிகளுடன், தலைமை செயலகம் சென்று, முதல்வரை சந்தித்தார். அதைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே, சமரசம் ஏற்பட்டுள்ளது.
முற்றுப்புள்ளி
இதை வெளிப்படுத்தும் விதமாக, பத்திரிகையாளர்களை சந்தித்த, தமிழக பா.ஜ., தலைவர் முருகன், ''அ.தி.மு.க.,- - பா.ஜ., கூட்டணி தொடர்கிறது. இக்கூட்டணி வலிமையாக உள்ளது. மற்றவற்றுக்கு விரைவில் பதில் கிடைக்கும்,'' எனக்கூறி, உரசலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
நிருபர்களிடம் அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் இருந்த கட்சிகள், தற்போதும் தொடர்கின்றன. கே.பி.முனுசாமி, பா.ஜ.,வை குறிப்பிட்டு எதுவும் பேசவில்லை. பா.ஜ., மாநில தலைவர்கள், கட்சியினரை உற்சாகப்படுத்த கருத்துக்கள் கூறுவதை, பொருட்படுத்த வேண்டியதில்லை. பா.ஜ., தேசிய தலைமை எதுவும் தெரிவிக்கவில்லை.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.
'நல்லதே கூடாது என்பது தி.மு.க.,வின் நோக்கம்!'
''தமிழக மக்களுக்கு நல்லது நடக்கக்கூடாது என்பதே, தி.மு.க.,வின் நோக்கமாக உள்ளது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.
முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்து பேசிய பின், முருகன் அளித்த பேட்டி:தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக, தமிழக பா.ஜ., சார்பில், கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. 50 லட்சம் பேர் கையெழுத்திட்டனர். தேசிய கல்வி கொள்கை ஆதரவு கூட்டமைப்பு சார்பில், இரண்டு லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இவற்றை, முதல்வரை சந்தித்து வழங்கினோம்.தேசிய கல்வி கொள்கையில், தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது. தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளில், மும்மொழி கொள்கை, நான்கு மொழி கொள்கை உள்ளது.ஆனால், அரசியலுக்காக வேண்டாம் என்கின்றனர். ஏழை மாணவர்கள், இன்னொரு மொழி படிக்கக் கூடாது. எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள், இன்னொரு மொழி படிக்கக் கூடாது என்பது, தி.மு.க., நோக்கமாக உள்ளது.
விவசாயிகள், காலம் காலமாக, அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு, அவர்களே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என, கோரினர். இதை, மத்திய அரசு பரிசீலனை செய்து, விவசாயிகள் வருவாயை இரட்டிப்பாக்க, வேளாண் திருத்த சட்டங்களை கொண்டு வந்துள்ளது.
அதையும் தி.மு.க., எதிர்க்கிறது. 2016 தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் சுதந்திரமாக, அவர்கள் விரும்பியபடி, வெளி மாநிலங்களில், வெளிநாடுகளில் சென்று, பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்போம்' என, கூறி உள்ளனர். இன்று, சட்டத்தை எதிர்ப்பது, இரட்டை நிலைப்பாடு.
நல்லது எதுவும் நடக்கக் கூடாது. தமிழக மக்கள் முன்னேறக் கூடாது என்பது தான், தி.மு.க.,வின் நோக்கம். ஏனெனில் முன்னேறினால் அவர்கள், தி.மு.க.,விற்கு ஓட்டு போட மாட்டார்கள். ஓட்டு அரசியலுக்காக மட்டும், வேளாண் சட்டங்களை, தி.மு.க., எதிர்க்கிறது. தி.மு.க.,விற்கு சரியான நேரத்தில், தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பர்.தி.மு.க.,வினர் நடத்தும், 69 பள்ளிகளில், மும்மொழி கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. .இவ்வாறு, முருகன் கூறினார்.
தி.மு.க.,வினர் பள்ளிகள்!
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகள் உட்பட, தி.மு.க., பிரமுகர்கள், அவர்கள் குடும்பத்தினர், தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் நடத்தும், ஆங்கிலப் பள்ளிகளில், ஹிந்தி உட்பட மூன்று, நான்கு மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.இப்பள்ளிகள் பட்டியலை, முருகன் வெளியிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE