மேட்டூர் : சேலம் மாவட்டம், மேச்சேரியில், பா.ம.க., ஆதரவாளர்கள் நேற்று போட்டி கூட்டம் நடத்தினர். இதில், நாளை நடக்கும், 20 சதவீத இட ஒதுக்கீடு போராட்டத்தில், தனியாக மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க., செயலராக, ஐந்து ஆண்டுகளுக்கு முன், மேச்சேரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் இருந்தார். கடந்த சட்டசபை தேர்தலில், மேச்சேரியில், பா.ம.க.,விற்கு ஓட்டு குறைந்ததற்கு, ராமகிருஷ்ணனே காரணம் என, கட்சி குற்றம் சாட்டியது.இதனால், அவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஒன்றரை ஆண்டுக்கு முன், மாவட்ட செயலராக ராஜசேகரன் நியமிக்கப்பட்டார்.ராஜசேகரன் தலைமையில், நேற்று முன்தினம் மேச்சேரி ஒன்றிய, பா.ம.க., ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறி, மேற்கு மாவட்ட வன்னியர் சங்க தலைவர் வாமலை, ராமகிருஷ்ணன் ஆகியோர், நேற்று மேச்சேரியில் போட்டி ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில், ஒன்றிய வன்னியர் சங்க நிர்வாகிகள், பா.ம.க., ஆதரவாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், டிச., 30ல், மேச்சேரி ஒன்றிய, பா.ம.க.,வினர் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பதில்லை. பதிலாக, 1,000 பைக்குகளில், 2,000 பேர் ஊர்வலமாக ஒன்றிய அலுவலகம் சென்று, வன்னியர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து ராஜசேகரன் கூறுகையில், ''கட்சி தலைமை உத்தரவை, முழுமையாக பின்பற்றியே கூட்டம் நடத்தினோம். அதில் பங்கேற்க, அனைத்து நிர்வாகிகளுக்கும், அழைப்பு விடுத்தோம். வாமலைக்கு அழைப்பு விடுத்தும், அவர் பங்கேற்க வில்லை,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE