சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல இலவச, 'பாஸ்டேக்' வழங்கப்படாததால், மாற்றுத் திறனாளிகள் தவித்து வருகின்றனர்.
நாடு முழுதும், நான்கு வழிச் சாலையில் இலகுரக வாகனங்களில் செல்ல, மாற்றுத் திறனாளிகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதில்லை. இதற்காக, அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் சான்று பெற்றிருக்க வேண்டும். டோல்கேட்களில் தடையின்மை சான்றை காட்டி, கட்டணமின்றி செல்லலாம். டோல்கேட்களில், 'பாஸ்டேக்' முறை அமலான பின், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பாஸ்டேக் வில்லையை, தேசிய நெடுஞ்சாலை ஆணையமான, 'நகாய்' வழங்கியது.
இதை பெற்றிருந்த மாற்றுத்திறனாளிகள் பலர், தங்கள் வாகனங்களை விற்று, புதிய வாகனங்களை வாங்கி உள்ளனர். அவ்வாகனங்களுக்கு பாஸ்டேக் கேட்டு, 'நகாய்'க்கு விண்ணப்பித்து ஓராண்டாகியும், இதுவரை கிடைக்கவில்லை.ஜன., 1 முதல், பாஸ்டேக் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. எனவே, 'இலவச பாஸ்டேக் வில்லை கிடைக்கும் வரை, வட்டார போக்குவரத்து அலுவலர் வழங்கும் தடையின்மை சான்றை காண்பித்து, டோல்கேட்களில் கட்டணமின்றி கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும்' என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE