தஞ்சாவூர் : தஞ்சையில், பம்பர் அகற்றப்படாமல், பல அரசு வாகனங்கள் இயங்கி வருகின்றன.
நான்கு சக்கர வாகனங்கள் மீது ஏதேனும் மோதினால், அந்த அதிர்வை உணர்ந்து, இருக்கைகளின் எதிரில், கீழ் உள்ள காற்று பைகள் விரியும். இதனால், விபத்தில் சிக்கும் வாகனங்களில் உள்ளவர்கள் உயிர் காக்கப்படும்.வாகனங்களில் பம்பர்கள் பொருத்துவதால், வாகனம் இடிபடும் அதிர்வு, சரியாக காற்று பைகளுக்கு கிடைப்பதில்லை. இதனால், விபத்தில் சிக்கும் வாகனத்தில் இருப்பவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. மேலும், வாகனம் மோதி, பம்பர் மீது அடிபட்டு பலர் பலியாவது நடக்கிறது.எனவே, மோட்டார் வாகன சட்டத்தில், நான்கு சக்கர வாகனங்களின் முன்னாலும், பின்னாலும், 'புல் பார் பம்பர்'களை பொருத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.பம்பர் பொருத்தப்பட்ட வாகனங்கள் மீது, போக்குவரத்து துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து, உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதையடுத்து, தமிழக ஆர்.டி.ஓ.,க்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், சோதனைச் சாவடி, சாலை சந்திப்புகளில் முகாமிட்டு, வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதே போல், அரசு வாகனங்களில் உள்ள பம்பர்களை உடனடியாக நீக்குமாறு, தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்.ஆனால், தஞ்சையில் பல அரசு அதிகாரிகளின் வாகனங்கள், பம்பர்கள் அகற்றப்படாமல் இயங்கி வருகின்றன. இதேபோல பல மாவட்டங்களிலும், அரசு வாகனங்களில், பம்பர்கள் அகற்றப்படாமல் வலம் வருகின்றன.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ''மக்களுக்கு உத்தரவிடும் முன், அரசு அதிகாரிகள், தங்களின் வாகனங்களில் பம்பர்களை அகற்றி இருக்க வேண்டும். ''அதை விட்டு விட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி, அவர்களின் வாகனங்களில் இருந்து பம்பர்களை அகற்ற சொல்கின்றனர். இதை வெறும் அறிவிப்பாக இல்லாமல், முழுமையாக அமல்படுத்த வேண்டும்,'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE