சென்னை : ''கொரோனா நோய் சிகிச்சை மற்றும் நிவாரண பணிகளுக்காக, 7,544 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
பொது மக்கள் வெளியில் செல்லும் போது, கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று முதல்வர் இ.பி.எஸ்., அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக ஆலோசனை நடத்தினார்.அப்போது, அவர் பேசியதாவது:தற்போது, பிரிட்டனில் பரவி வரும், புது விதமான கொரோனா நோய் தொற்று, தமிழகத்திற்குள் பரவி வருவதாக செய்திகள் வருகின்றன. இதுவரை கண்டறியப்பட்டுள்ள, 13 பேருக்கு, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக புனேக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
முக கவசம் கட்டாயம்அதன் முடிவுகள் வந்த பின் தான், உருமாறிய வைரஸ் தொற்று உள்ளதா என்பது தெரியும்; அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்க முடியும்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஒரே வழி முக கவசம் அணிவது தான். ஆனால், நோய் தொற்று குறைந்து வருவதால், பொது மக்கள் முக கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர்.இந்த உருமாறிய வைரஸ் தொற்றும், முக கவசம் அணியாததால் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, பொது மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்றினால், நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். வெளியில் செல்லும் போது, முக கவசம் அணிவது கட்டாயம். மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை, மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தியதால், கொரோனா நோய் பரவல், ௧,௦௦௦க்கு வந்துள்ளது.
நோய் படிப்படியாக குறைந்து வருகிறது. படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறோம். கொரோனா சிகிச்சை மற்றும் நிவாரண பணிகளுக்காக, 7,544 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.நோய் கட்டுப்பாட்டு பகுதியில், கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. நடமாடும் வாகனம் வழியே, பரிசோதனை நடத்தப்படுகிறது. களப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று, நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிகின்றனர். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளிக்கின்றனர். இதுவரை, 6.17 லட்சம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில், 3.27 கோடி பேர் பங்கேற்று உள்ளனர்.
வரவேற்புஅவர்களில், 12.59 லட்சம் பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது.ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், 'அம்மா மினி கிளினிக்' துவக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், படிப்படியாக துவக்கப்படும். இது, மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு கிளினிக்கிலும், தினமும், 75 பேர் முதல், 125 பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா தடுப்பூசி முன்னேற்பாடு நடவடிக்கைக்கு, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. புத்தாண்டு, தை பொங்கல் பண்டிகை வருவதால், மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும், விழிப்புடன் தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.
முக கவசம் அணியாதவர்களுக்கு, அபராதம் விதிக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விடுதிகள், கல்லுாரிகள் போன்றவற்றில், அடிக்கடி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத் துறை விழிப்போடு, அவ்வப்போது நோய் அறிகுறி உள்ளதா என, ஆய்வு செய்ய வேண்டும்.தமிழகத்தில், நோய் தொற்று பரவல், 5.84 சதவீதமாக உள்ளது. தற்போது, 8,947 பேர் சிகிச்சையில் உள்ளனர். இறப்பு, 1.45 சதவீதமாக உள்ளது.இவ்வாறு, முதல்வர் பேசினார்.மருத்துவ நிபுணர்களுடன்முதல்வர் ஆலோசனை!தமிழகத்தில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நாளை மறுதினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு நிறைவடைகிறது.
ஊரடங்கு தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதும், அங்கிருந்து தமிழகம் வந்தவர்களுக்கு, கொரோனா தொற்று கண்டறியப்பட்டதும், மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது, ஊரடங்கு நீட்டிப்பு குறித்து, நேற்று காலை, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, முதல்வர் ஆலோசனை நடத்தினார்.அதைத் தொடர்ந்து, மருத்துவ நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடந்தது. இக்கூட்டத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், உதயகுமார் பங்கேற்றனர்.
சென்னையில் உள்ள, தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குனர் பிரதீப் கவுர், உலக சுகாதார அமைப்பு முதுநிலை மண்டல குழுத் தலைவர் அரண்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், கொரோனா நோய் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு, நாளை மறுதினம் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE